மனித மனதின் கதறல்

#மனித_மனதின்_கதறல்...

விலைமதிப்பற்ற உயிரை விலை கொடுத்து ஈடுகட்டப் பார்க்கும் இந்த சமுதாயத்தில் கருணையால் நிரம்பிய எனது நெஞ்சம் படும் வேதனையை யாரிடம் சொல்லி அழுவேன் எனது தமிழன்னையே உன்னையன்றி...

பூக்கும் காதலர்களுக்கு கவியாய்,
ஆறுதல் தேடும் நெஞ்சங்களுக்கு ஆறுதலாய்,
புன்னகை தரும் புத்துணர்வாய்,
நன்னெறி போதிக்கும் அறிவுக்கடலாய்,
நிற்கும் தமிழே உன்னையறியாதவரும் தமிழனென்று மினுக்கித் திரிவதைக் காண்கிறேன் மனதைக் கொல்லும் மடையர்களாய்...

என்ன செய்வேன் தமிழே?
நாடுகாக்க வீரன் மரணமடைகிறான்..
அவனை நம்பி வாழ்ந்த குடும்பத்தை நாடு காக்கத் தவறுகிறது...
வீதியிலே பெண் நிம்மதியாகச் செல்ல இயலவில்லை...
வளையம் வரும் கண்கள்...
அவற்றின் நோக்கம் தவறாகவே உள்ளது...

யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டால் எனக்கென்ன?
நான் ஏன் துடிக்கிறேன்?.
அந்தச் சூழலில் நானிருப்பதாகவே உணர்கிறேன்...
அதன் தாக்கத்தால் எனது மனம் வலிக்கிறது...
கண்ணீர் சிந்துகிறது கண்கள்...
உயிரற்ற பிணங்களுக்கு உயிரைப் பற்றி எவ்வாறு போதிப்பேன்?

எத்தனை முறை மரிப்பேன்?
எத்தனை முறை உயிர்த்தெழுவேன்?
அன்பும், கருணையும் என்னை(ப் போன்றவர்களை) மனிதராக வாழ்விக்கட்டுமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (27-Jul-17, 11:05 pm)
பார்வை : 721

மேலே