ஓா் பேதையின் கதறல்

தேனென நீ உதிர்த்த வார்த்தைகள்
ஆணென உன் ஆதிக்கம் தொடங்கியபின்னே
வீணானவையென விளங்கியதெனக்கு..!

மதுவுக்கும், மாதுவுக்கும்
மானத்தை விலை பேசிய உனக்கு
என் மனம் புாிந்திருக்க வாய்ப்பில்லைதான்..!

கண்ணியமிழந்தாயென நான் கதறியழ
என் கற்பையும் சீர்குலைக்க முற்பட்டாய்..!

சீதை நானென தீக்குளிப்பு செய்துவிட்டேன்
பேதையென்னை தீண்டிய அக்கினிதேவனும்
மோட்சம் கொடுக்கவில்லை..!

எங்கோ என்னை கிடத்தியிருக்கிறார்கள்
என் தேகம் மட்டும் இன்னமும்
எரிந்துகொண்டுதானிருக்கிறது..!

தாகமென சத்தமிட எத்தனிக்கிறேன்
வார்த்தைகள் தொண்டைக்குழியில்
விழுந்து தற்கொலை செய்துகொள்கின்றன..!

காலதேவனின் வருகையை எதிர்நோக்கியிருக்க
நீ எனக்களித்த பரிசொன்றைப்பற்றி
பேசிச்செல்கின்றனர் தாதிப்பெண்கள்..!

தேய்வு நோயை எனக்கு பகிர்ந்தளிக்க
என் மரணத்தை விலை பேசினாயோ?

என்னோடு தென்றலும்
கவனித்தது போலும்!
அடுத்த கணம் என்னுள்
பிரவேசிக்கவேயில்லை..!

எழுதியவர் : நிவதா சுப்பிரமணியம் (27-Jul-17, 10:21 pm)
பார்வை : 100

மேலே