கண்களில் என்ன இருக்கிறது

கண்களில் என்ன இருக்கிறது என்கிறாய் ...
கண்களில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறேன்...

**

அல்லி மலர் போல
குவளை மலர் போல
குளிர்ந்த கண்கள்..!

**
கோடையில் பிளந்த நிலம் போல
துரோகம் வெடிக்க
வெதும்பிக் கிடக்கும் கண்கள்..!

**
பாலையில் அலையும் வெய்யில் போல
பழி உணர்ச்சி கொண்டலையும் கண்கள்..!

**
இரு பாவ மூட்டையைப் போல
துரோகத்தை தூக்கி சுமக்கும் கண்கள்..!

**
பசியில் புரட்டும் வயிற்றுக்கு வேண்டி
மானம் பாராது யாசித்து கிடக்கும்
பூஞ்சை கண்கள்..!

**

விசேஷ வீட்டு மாவிலை தோரணம் போன்று
எப்போதும் அலங்கரித்துக் கொள்ளும் கண்கள்..!

**

பதவி ..
பவிசில்..
இறுமாப்பில்
மிதக்கும் ஏகாந்த கண்கள்..!

**
ஓயாத
வேட்டை மிருகமென
காமம் அலையும் கண்கள் ..!

**
அந்தி சூரியன் போல
அன்பொழுகும் ஒரு வார்த்தைக்கும்
கடை மடையின்
மதகு போல கசியும் கண்கள்..!

**
நாய்க் குட்டியை போல
எப்போதும்
வாலாட்டும் கண்கள்..!

**
கோடை குளத்தின் கடைசி இரு சொட்டு நீர் போல
மரணத்தை யாசித்து ஒடுங்கி கிடக்கும் கண்கள்..!
**
கண்கள் மனதின் வாசல்
இன்னும் இன்னும் கண்கள் எத்தனை வகை

**
ஆனாலும்
முன்னெப்பொழுதும்
சந்தித்திராத ஆதி அன்பின் கண்கள் உன்னுடையவை..!
**
ம்ம்..
இதோ
உன்னை நெருங்கி,
நெருங்கி..
இன்னும் நெருங்கி..
செட்டியார் தோட்டத்து
ஆழ்ந்தகன்ற கிணற்றில்
துள்ளிக் குதிக்கும்
பால்ய காலப் பள்ளிச்சிறுவன் போல

அப்படியே
உன்
கண்களுக்குள் குதித்து விட வேண்டும் நான்..!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (28-Jul-17, 9:10 am)
பார்வை : 232

மேலே