​காட்சியும் கவிதையும் - 3

காட்சி : -

போர்​ ​முடிந்து வெற்றிக் களிப்பில் நாடு திரும்பிய
படைத்தளபதி ஒருவன் ​​மனைவியை பலநாட்கள்
பிரிந்திருந்த காரணத்தால் மாலைப்பொழுதைக்
கழித்திட மலர்கள் நிறைந்த சோலைக்கு ​​சென்றான்
அவளுடன் ​.​அமைதி​யான ​இடமும் சுகமான ​சூழலும்
வீரனின் இதயம் இன்ப​முடன் சிறகடித்துப் பறந்தது .
மனதில் வீரமுடன் காதலும் இணைந்த கவிதையும்
பிறந்தது இவ்வாறு :
----------------------------------

வாழ்வில் இணைந்த வசந்தமே
இதயத்தில் நிலைத்த இனியவளே
வீரத்தை மணந்த வெண்ணிலவே
களம்சென்று வந்தேன் கடமையாக
வாகையும் சூடினோம் வரலாறாக !

எக்காளமிட்ட எதிரிகளை வீழ்த்தி
பாய்ந்துவந்த பகைவரை துரத்தி
வெற்றிக் கனியை கையிலேந்தி
களைப்பாய் வந்தவன் களிப்புற
கழிப்போம் பொழுதை இன்பமாக !

எழில்மிகு சிலையே ஏழிசையே
நாணம் கொள்கிறது மலர்களும்
நாயகி உன்னழகை கண்டதும் ..
மயிலும் மயங்குது உன்னாலே
புன்னகைப் புரியுது புரவியும் !

ஈட்டிமுனை கூரான உன்விழிகளால்
வாள்வீச்சாய் சுழலும் பார்வையால்
எதிரியாக வீழ்கிறேன் உன்மடியில்
தளபதியான நானோ உந்தன்பிடியில்
கேடயமாக அணைத்திடு நெஞ்சோடு ...

வேட்கையுள்ள வீரனின் வேகமுடன்
தாகம்தீர்க்கும் தீர்வென தாபமுடன்
மொழிந்தேன் ஊற்றெடுத்தக் காதலை
வழிந்தேன் வஞ்சியவளை கொஞ்சியே
பதிலுரையாக சிரித்தாள் சிணுங்கினாள் ...

முழுக்கதையைக் கூறிட வரவில்லை
முடிவுரையும் எழுதிட முற்படவில்லை
கற்பனையாய் வடித்தேன் வரிகளை
காவியமாய் நினைத்தேன் ஓவியத்தை
கவிதையாய் பதிவிட்டேன் தோன்றியதை ..!


பழனி குமார்


Close (X)

5 (5)
  

மேலே