பாவச்சுமை

' பாவச்சுமை'
" ஒரு டசன் அறுவது ரூபா சார்....."
" இந்த மாம்பழம் அறுவது ரூபாயா? அநியாயமா இருக்கேப்பா...."
" என்னா சார் பண்றது, எங்களுக்கும் கட்டுப்படியாகணுமில்ல... வாங்கறதுன்னா வாங்குங்க, இல்லேன்னா அந்தாண்ட போயிடுங்க. நான் வியாபாரம் பண்ணனும்." என்ற கடைக்காரன் வியாபாரத்தில் மும்முரமானான்.சிவராமன் யோசித்தான். மாம்பழம் சாப்பிட வேண்டுமென்கிற ஆசையோடு கடைவரை வந்து விட்டு வாங்காமல் போனால் வீட்டிற்கு போனபிறகு மனசு அடித்து கொள்ளும்.
சிவராமன் ஒரு முடிவோடு,
" ஒரு டசன் கொடுப்பா...." என்றான்.
" அருமையான பழமா பாத்து கொடுக்கறேன் சார்"
அவன் மளமளவென்று பழங்களை எண்ணி பையில் போட்டான். அவன் எடுத்த வேகத்தில் ஒரு மாம்பழம் உருண்டு சிவராமன் காலடியில் விழ, ஏற்கனவே விலை அதிகம் என்று மனதுக்குள் பொருமிக்கொண்டிருந்தவன் கீழே கிடந்த மாம்பழத்தைப்பார்த்ததும் ஒருகணம் தடுமாறினான்.
கடைக்காரன் இன்னொருவரிடம் பேரம் பேசிக்கொண்டிருக்க, அவன் கவனிக்கவில்லை என்கிற தைரியத்தில் அவசரமாய் அந்த மாம்பழத்தை எடுத்து பைக்குள் போட்டுக்கொண்டவனுக்கு இதயம் படபடவென்று அடித்து கொண்டது.சைக்கிளில் ஏறி கொஞ்ச தூரம் வந்த பிறகே சிவராமன் நிம்மதியானான்.
வாசன் சுவீட் ஸ்டாலைப்பார்த்ததும் ப்ரியாவின் ஞாபகம் வர, சிவராமன் சைக்கிளை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான். அந்த கடையில் லட்டு பிரசித்தம். திருப்பதி லட்டு போல் பிரமாதமாக இருக்கும். ப்ரியாவுக்கு லட்டு என்றால் உயிர்.
" வாசன் பக்கம் போனா எனக்கு லட்டு வாங்கிட்டு வாப்பா..." என்று சிவராமன் எப்போது வெளியில் கிளம்பினாலும் சொல்லுவாள்.
பிரியா ஆசைப்பட்டு எதுவுமே கேட்டதில்லை. எந்த டிரஸ் வாங்கி கொடுத்தாலும் போட்டுக்கொள்வாள். சாப்பிட்டு விஷயத்திலும் அவளுக்கு பெரிதாய் நாட்டமிருந்ததில்லை, லட்டுவைத்தவிர.
" யார் செஞ்ச பாவமோ உன் பொண்ணு தலையில விடிஞ்சிருச்சேப்பா....பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகளை படுத்தும்னு சொல்லுவாங்க. யாரு, என்ன பாவம் செஞ்சாங்களோ தெரியலையே....."
ஆளாளுக்கு வருத்தப்படுவார்கள் ப்ரியாவைப்பார்த்து. சரியான நேரத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டதில் அவளுக்கு போலியோ தாக்க, சிவராமனும், மைதிலியும் துடித்து போனார்கள்.
" பத்து வயசுப்பொண்ணு எப்படி ஓடியாடணும். நம்ம பொண்ணு நடக்கறதுக்கே யாராவது பிடிச்சிக்க வேண்டியிருக்கே....." என்று சிவராமன் மறுகும் போது,
" நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம். பசிச்சவங்களுக்கு சோறு போடாம விரட்டினோமா, மத்தவங்க மனசு புண்படறமாதிரி பேசினோமா, அடுத்தவன் பணத்தை அபகரிச்சோமா....என்ன பண்ணினோம் ? நமக்கேன் இந்த விதி....?" என்று மைதிலி அழுவாள்.
சிவராமனுக்கு அது ஞாபகம் வர சுரீரென்றது. உடனே மாம்பழக்கடையை நோக்கி சைக்கிளை விட்டான். அந்த பதிமூணாவது மாம்பழம் பாவச்சுமையாய் கனத்தது.
முற்றும்

எழுதியவர் : (1-Aug-17, 10:52 pm)
சேர்த்தது : kiruthiga
பார்வை : 78

மேலே