காண்போமே பிக்பாஸ்

அரிசியோடு சர்க்கரையும் அதனை சமைக்கும்
எரிவாயு குப்பிதனின் மானியமும் – ரத்தானால்
எனக்கென்ன ? இனிதாக பொழுதினை கழிக்க
கணக்காக காண்போமே பிக்பாஸ் !
ஆட்காட்டி விரலதில் அழகாக மையிட்டு
நாட்காட்டி காட்டிய நாளதில் – ஓட்டினை
போட்டதுமே என்கடமை முடிந்த தாலே
வேட்டியும் வீழ்ந்தனவே வீதியில்!
பண்பாக மோர்கொடுத்து பரிதவிக்கும் வாய்க்கு
அன்பாக அன்னமும் இட்டார் – திண்ணை
கட்டியே வாழ்ந்திட்ட காலம் முழுவதும்
கருணையாய் பொழிந்த்தே கார் !
இல்லாத ஏழைக்கும் இனியநிலா ஒளிதந்து
கல்லாத பேருக்கும் கனிவான – சொல்
உதிர்த்தோர் வாழுகின்ற ஊரில் எல்லாம்
ஓடித்தான் பாயுதே ஓடை !
கவிஞர் கே. அசோகன்