அம்மா என் தெய்வம்
வெள்ளை தாளுக்கு
தினமும் முத்தமிட்டு
கவிதை சிந்தும்
என் பேனா இன்று ஏனோ
முத்தமிட மறுத்து
கண்ணீர் சிந்துகிறது...
இறைத்துக்கொண்டே
இருந்தாலும்
சுரந்துக்கொண்டே
இருப்பது தான் தாய்பாசம்...
உறவுகளிலே
உன்னதமானவள்
உலகிலே
புனிதமானவள்
அன்பிலே
தூய்மையானவள்
இன்னல்களை தாங்கி
தாய்மையானவள்
தீய எண்ணங்களை அகற்றி
தூய குணங்களை
கற்றுத்தந்தவள் அம்மா...
உயிரில் உயிரை பெற்று
உயிருக்குள் உயிரை வளர்த்து
உலகுக்கு உயிரை தருபவள் அம்மா...
பெய்என்றால் பெய்யும்
நாசக்தி படைத்தவள் அம்மா
எத்தனை இன்னல் தன் மகன் தந்தாலும் தன் மகனை தவறியும்
சபிக்க தெரியாதவள் அம்மா...
எத்தனை பிறவி எடுத்தாலும்
நாள்தோறும் சேவைகள்
பல செய்தாலும் கண்ணுக்குள்
வைத்து காத்தாலும்
அவளது பொற்பாதங்களுக்கு
அபிஷேகம் பல செய்தாலும்
இந்த ஞாலத்தையே
தாரைவார்த்து கொடுத்தாலும்
தமிழ் அன்பு அரவனைப்பு
பாசம் அகிம்சை
நம்பிக்கை நல்லொழுக்கம்
இவைகளை கலந்து நமக்கு
ஊட்டிய ஒரு சொட்டு
தாய்பாலுக்கு ஈடாகுமா...?
அம்மா என்ற சொல்லே
நானறிந்த வேதம்
அவளின் பாதம்
வணங்கினாலே போதும்
தேவையில்லை வேறேதும்...
எத்தனை தெய்வங்கள் வந்தாலும்
வரங்கள் கோடி தந்தாலும்
ஒரு தாயின் அன்புக்கு ஈடாகுமா
அவளின் தியாக சேவைக்கு நிகராகுமா...
பாரில் உள்ள அனைத்தும்
அவளது காலடி மண்ணுக்கு இணையாகுமா...
அவளின்றி அமையாது
இந்த உறவுகள் அனைத்தும்...
தன் குழந்தைக்கு
ஒரு இடர் வந்தால்
அம்மா சொல்லும்
முதல் வார்த்தை
கடவுளே என்பது தான்...
அந்த கடவுளுக்கே
ஒரு இடர் என்றால்
அவன் தன்னையறியாமல்
சொல்லும் ஒரே வார்த்தை
அம்மா என்பதன்றி
வேறொரு வார்த்தை கிடையாது...
ஐயிரண்டு திங்கள்
உன் கர்பபையிலே
ஆறாறு திங்கள் உன்
அன்பு கையிலே
மனம் சஞ்சலிக்கும்
போதெல்லாம்
உன் கருணைமடியிலே
இதுதான் நான் கண்ட
மாபெரும் சொர்கம்
என் வாழ்விலே.
அம்மா...
மண்ணுக்குள் உம்மை புதைக்கவில்லை
விதைக்கிறோம் முளைத்தெழுந்து வாருங்கள் மீண்டும் ஒருமுறை
உன் கருவரையில் நான் ஜனிக்கவேண்டும்....
நான் அழுத ஒவ்வொரு அழுகைக்கும்
அர்த்தம் தெரிந்து
என் தேவையை
பூர்த்தி செய்தவளே
இன்று நான் அழுகிறேன்
என் அழுகையின் அர்த்தம்
புரிகிறதா உனக்கு...