கண்ணுறங்கிய குட்டன்

ஆட்டங்கள் முடித்து
அயர்ந்து உறங்கும்
உன் முகம்

பெரு மழையில்
எதிர்பாராமல் கீழே
சாய்ந்த மரம்

வேட்டையாடி புசித்து
வயிறு நிறைந்து
களைத்து போய்
ஓய்வுகொள்ளும் ஒரு
சிங்கத்தின் சிலை

ஓய்வு தேவைப்படாது
ஓடிக்கொண்டே இருந்த
குதிரை மெய்மறந்து
மரநிழலில் சாய்ந்த
மந்திர நிகழ்வு

நெடு நாளைய
பெரும் போரில்
வெற்றி கண்டுவந்த
அரசனின் அந்தப்புர
விஜயம்

காலையில் இருந்து
கதம் சொல்லமுடியாமல்
அலறிக் கொண்டிருந்த
அந்த ஒலிபெருக்கியை
அணைத்த மின்சார துண்டிப்பு
தந்த நிசப்தம்
உன் சத்தம் கேட்காத
இந்த வீடு

கிளையில் இருந்து
எதிர்பாரா காற்றில்
உதிர்ந்த மலராய்
கட்டிலில் கிடக்கிறது
உன் மேனி

போர்வைகள் நீ
விரும்புவதில்லை
பூக்களின் தூக்கத்துக்கு
ஏன் போர்வை
என நினைப்பாயோ
என்னவோ எப்போதும்
தள்ளிவிடுகிறாய் போர்த்திய
போர்வையை

கல் எரியாத
குளத்து நீரின்
தெளிந்த அழகின்
பளிங்கு தாமரையாய்
பேச்சு மறந்த
உன் உதடுகள்


அழுகை
அக்கிரமம்
அடம்
அடாவடித்தனம்
வாலுத்தனம்
சுட்டித்தனம்
குறும்புகள்
கேள்விகள்
என அத்தனைக்கும்
விடுப்பு கொடுத்து
உறங்கி போன
முதலாளியாய் இப்போது
மதிய தூக்கத்தில்
மன்னவன் அவன்...
தன்னை மறந்து
கண்ணுறங்கிய குட்டன்

என் மடி பூத்த
முதல் குட்டி பூ !!

எழுதியவர் : யாழினி வளன் (9-Aug-17, 1:01 am)
பார்வை : 893

மேலே