இனி ஒரு ஜென்மம் வருமோ
===============================
ஒருகொடியின் மலராக பூத்தோம்
=உறவென்னும் கூட்டுக்குள் வாழ்ந்தோம்
இருவிழிகள் நதியாகி பாய
=எமைவிட்டுச் சென்றாயே துடித்தோம்
.
நோய்கொண்டு போனதுதான் எனினும்
=நொடிந்திட்டோம் பிரிவென்னும் துயரில்
வாய்விட்டு அழச்செய்து போனாய்
=வருத்தத்தில் வீழ்ந்திட்டோம் தானாய்
.பதின்மூன்று பேர்கொண்ட நம்மில்
=பாதிக்கு மேலின்று குறைந்தோம்
கதிரின்றி இருள்சூழ்ந்த பொழுதாய்
=கவலைக்குள் அகப்பட்டு விட்டோம்
கூடப்பிறந் தொன்றாக வாழ்வோர்
=கூடவொன்றாய் போகின்ற தென்றால்
கூடவரு வதுமில்லை துன்பம்
=கூடுவோமோ இனியொரு ஜென்மம்.
.
(கடந்த 5ம் திகதி இயற்கை எய்திய என் அன்பு அக்காவின் பிரிவுத்துயரம்)
*மெய்யன் நடராஜ்