இரக்கமில்லா இறையே

இரக்கமில்லா இறையே !!!!

உறங்கிடவும் நினைக்கின்றேன் உறக்கந்தான் வரவில்லை
மறவாத நினைவுகளில் மாதாவும் வந்திடவே
இறந்திடவும் எண்ணுகின்றேன் இரக்கமில்லா இறையேநீ
உறவான அம்மாவை உயிர்கவர்ந்தாய் ஏன்தானோ !!!

அம்மாவே தெய்வமன்றோ அன்பொன்றே அவளறிவாள் .
சும்மாவே இருந்தாலும் சுகத்தையுமே பேணிடுவாள் .
அம்மாபோல் அரவணைக்க ஆண்டவனால் முடிந்திடுமா !
தம்மின்நோய் பொறுத்திடுவாள் தாங்கிடுவாள் எனையுந்தான் !

நோய்வந்த போதினிலும் நோகாமல் எனைக்காத்தாள்.
பாய்தனிலே சுருண்டபோதும் பார்த்திருப்பாள் என்முகத்தை .
வாய்தன்னில் உணவினையும் வந்துநானும் ஊட்டினாலோ
காயென்றும் பழமென்றும் காட்டிடுவாள் விரலிரண்டை !!

குழந்தைபோல் மாறினாளே குதூகலமாய்ச் சிரித்தாளே
பழங்கதைகள் பேசினாளே பக்கத்தில் அமர்ந்துகொண்டு .
அழக்கூடத் தெரியவில்லை அணைத்தேனே அன்னையினை .
வழக்கமான பேச்சுக்கள் வாட்டியதே இதயத்தை !!!

இரவெல்லாம் அவள்நினைவு இறந்துவிடத் துடிக்கிறதே
வரமாக வந்தவளாம் வளர்த்தாளே பக்குவமாய் .
அரவணைத்தே ஆறுதலும் அன்பாகச் சொல்லிடவே
விரல்பிடித்தக் கைகளையும் விரைந்துநானும் தேடுகின்றேன் !!

பாசத்தால் வளர்த்தவளோ பரிதவிக்க எனைவிட்டு
வாசமிலா உலகினிலே வாடிடவே செய்துவிட்டாள்.
நேசத்தால் அழைக்கின்றேன் நெஞ்சமெல்லாம் நீதானே !
மாசற்ற அன்பினாலே மகளெனையும் ஆட்கொண்டாய் !!!

நெஞ்சுவலி வந்தபோது நேர்த்தியாகக் காத்திட்டாய்
பஞ்சுமனம் எனதென்று பாவிநீயும் அறியாயோ !
விஞ்சுகின்ற பேச்செல்லாம் விடிவெள்ளி உனைக்காக்க .
கொஞ்சுகின்ற மொழிகேட்க கோவில்முன் நிற்கின்றேன் !!

வலிகளெல்லாம் வந்தபோது வந்தருகே அமர்ந்துகொண்டு
வலிநீக்க என்கைதனை வாட்டமாகப் படித்துவிட
வலியெல்லாம் மாறிப்போய் வந்தணைத்துக் கொள்வேனே !
சலிக்காமல் உன்முகத்தில் சந்தோசம் மின்னிடுமே !!

கோவில்கள் பலசென்றேன் கோபுரமாய் நீவாழ
பாவிநானும் என்செய்வேன் பாசத்தால் கட்டுண்டேன் .
மேவிடவும் துன்பங்கள் மேனியுமே மெலிந்திடவும்
தாவியுமே தாங்கினேனே தனிமையிலே விட்டுவிட்டாய் !!

சொந்தங்கள் பலவிருக்க சோகத்தை மறைத்தேனே !
வந்தவர்கள் கவனிக்க வடிவத்தில் சிலையாகி
அந்தநாளில் நின்றேனே அதன்பின்னர் தினந்தினமும்
சிந்தனையில் நீயிருக்க சின்னவளும் கதறுகின்றேன் !!!

ஒப்பாரி வைத்திடவும் ஓலமிட்டு அழுதிடவும்
செப்புகின்றேன் இந்நாளில் சேர்த்தணைக்க யாருமின்றி
இப்பாரில் காரியமும் இறுதியான சடங்காக
எப்படிநான் எடுத்துரைப்பேன் என்னிலையை அந்நேரம் !!!

தனிமையிலே அழுகின்றேன் தாங்கிடவே நீவேண்டும்
இனிமையான நம்முறவும் இனியெனக்கும் வந்திடுமா !
கனியாகிச் சுவைத்தாயே காலத்தால் மறைந்தாயே !
பனிபோன்ற துயரங்கள் பகிர்ந்துகொள்ள நீவேண்டும் !!!

அழைக்கின்றேன் அன்னையுனை ஆறுதலும் தருவதற்கு
விழைகின்றேன் உன்னினைவில் வியன்பொருளே வரவேண்டும் .
அழைக்கும்முன் வருவாயே அம்மாவே நீயெங்கே !
உழைப்பாயே எனக்காக உருவின்றிச் சிதைந்தாயே !!

சுத்தமென எண்ணிடுவாய் சூழ்நிலையோ புற்றுநோயால்
பத்துநாட்கள் குளித்துவிட பலதடைகள் வந்துவிட
கத்துகின்ற உன்குரலோ கலக்கத்தை தந்திடுமே .
செத்துசெத்துப் பிழைத்தாயே செல்லமனம் இல்லாமல் !!!

கண்ணாடிப் பெட்டிக்குள் கணப்பொழுதும் அடைக்காதீர்
வண்ணங்கள் போய்விடுமே வாசமிலா நிலைவருமே
எண்ணங்கள் பலசொன்னாய் என்செய்வேன் நானுந்தான்
அண்ணனது வருகைக்காய் அடைத்தேனே பெட்டிக்குள் !!

என்னவெல்லாம் நினைத்தாயோ ஏற்றம்தான் எனக்கில்லை
உன்மகளை நீதானே உறவாக நினைத்திங்கே
மன்னிப்பை வேண்டுகின்றேன் மலரச்செய் என்வாழ்வை !
என்றனையும் பிரிந்தாயே என்அம்மா நீயெங்கே !!!

மகனென்றும் மகளென்றும் மாற்றங்கள் பார்த்ததில்லை
அகம்முழுதும் அன்பொன்றே ஆயுதமாய்ப் பற்றிட்டாய் !
முகமலர்ந்து வரவேற்கும் முழுமதிக்கு நிகர்த்தவளே !
சகத்தினையும் விட்டுவிட்டு சடுதியிலே மறைந்தாயே !!

தீக்குள்ளே சென்றபோதும் தீபமாய் நின்றாயே
வாக்குகளோ பலதந்தாய் வந்திடுவேன் எனசொன்னாய் .
சாக்குகளே அவையெல்லாம் சந்திக்கும் வலியாலோ
வாக்கினிலே எமனையுமே வரச்சொன்னாய் என்னிடமே !!

கண்ணீரை மறைத்தேனே கதறினேனே நெஞ்சிற்குள்
விண்ணுலகு நீவேண்ட விரைந்தழைத்தான் எமதர்மன் .
மண்ணுலகின் விதியிதுவோ மரணம்தான் கதிதானோ
திண்ணமுடன் இருக்கும்நான் திக்கெல்லாம் தேடுகின்றேன் !!

உன்னுடனே சென்றகொவில் உள்ளத்தைத் தைக்குதம்மா .
நின்றிடுவாய் நடந்திடுவாய் நிசமாகிப் போகாதா
என்னுடைய விரல்களையும் எப்படியும் பற்றிநீயும்
மென்பாதம் நடைபயில மெல்லமெல்ல அடிவைப்பாய் !!

மாதங்கள் நாழிகைகள் மனத்துள்ளே எண்ணியுமே
வேதனையைத் தாங்கினாயே வேற்றுமொழி உரைக்காது
சாதலுடன் போரிட்டாய் சந்ததிக்காய் வாழ்ந்திடவே
பாதங்கள் ரணமாகிப் பட்டாயே துன்பத்தை !!!

காலையிலே விரைவாக கண்விழித்தே எனையெழுப்பி
வேலையெல்லாம் முடித்திடவும் வேகமாக என்னுடனே
மாலைவரை ஏதேதோ மந்திரமாய்ப் பேசிடுவாய்
வேலைபல வந்திடினும் வேட்கையுடன் நான்கேட்பேன் !!

கவிதைகளை வாசிக்க கவனமுடன் கேட்டிடுவாள்
செவிதனிலே விழுந்தசொல் செம்மையுடன் நீரசிக்க
புவிதனிலே நானுந்தான் பூரிப்பும் அடைவேனே !
கவியருவி பட்டத்தை காணுதற்கு நீயெங்கே !!!

பட்டங்கள் பெறுகின்றேன் பார்ப்பதற்கு நீயெங்கே !
திட்டமாக நூல்தன்னைத் திண்ணமுடன் வெளியிடவே
கிட்டவந்தே என்னிடமே கிளிபோலே சொன்னாயே !
கட்டாக என்நூல்கள் காசினியில் தேடுதம்மா !!!

ஆசையினைப் பூர்த்திசெய்தேன் அம்மாவே நீயெங்கே !
ஆசானின் ஆசிபெற்றேன் அம்மாவே நீயெங்கே !
வாசமில்லை மனத்தினிலே வாடுகின்றேன் உன்மகளே !
ஏசாதப் புகழ்பெறினும் என்அம்மா நீவேண்டும் !!

நூல்களுமே எழுதிடவே நூறுமுறை ஆசிதந்தாய்
பாலூட்டும் அன்பாலே பரவசமாய் நின்றாயே
கால்களுமே நீசென்ற காலடியை நோக்குதம்மா !
மேல்கீழே பார்க்கையிலே மேனியுமே தளருதம்மா !!

உன்வயிற்றில் பிறந்தேனே உதிரத்தால் உருவானேன்
என்கண்ணீர் மாற்றிடவே எப்படியோ வாராயோ !
பன்மொழிகள் பேசிடுவாய் பாசத்தால் அணைத்திடுவாய்
என்மொழிகள் இல்லையினி எங்கேதான் போனதுவோ !!

தேடுகின்றேன் உன்றனையும் தேம்பியுமே அழுகின்றேன்
வாடுகின்றேன் நீயின்றி வருவாயா என்னில்லம் .
பாடுகின்றேன் உனையெண்ணிப் பாட்டெல்லாம் கண்ணீரால்
நாடுகின்றேன் இறைவனையும் நல்லறமே செயவேண்டி !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Aug-17, 8:55 am)
பார்வை : 137

மேலே