பெண் மனது ஆழமென்று தொடர் பாகம் 3 அ

பெண் மனது ஆழமென்று...

பாகம் 3 அ

முன்கதைச் சுருக்கம்

புதிதாக மணமான தம்பதிகள் திவாகரும் சரண்யாவும் தேனிலவுக்கு ஊட்டி போகிறார்கள். ஊட்டியிலிருந்து திரும்பி வந்த திவாகர் தனது வீட்டில், பால்கனியிலிருந்து கீழே குதித்து இறந்து போகிறான்..

.................................................................................................................................

சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

காற்றும் வெயிலும் நிறைந்த முற்பகல் நேரம். வீட்டில் கல்யாணத்துக்காக கட்டியிருந்த வாழை மரங்கள் அப்படியே இருக்க, அதன் மேலே மரணத்துக்கான பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர். உறவினர்களும் நண்பர்களும் கீழே திரண்டிருந்தனர். அந்த அனுதாபப் பார்வையை சகிக்காது நான் அறைக்கு வந்து விட்டேன். என் அம்மா வற்புறுத்தி இரண்டு வாய் காபி குடிக்க வைத்தாள். அவள் காலி கோப்பையோடு கீழே போன சமயம் நான் கட்டிலில் தலையை முட்டுக் கொடுத்து தரையில் உட்கார்ந்திருந்தேன்.

பதினேழு நாட்கள்..! பதினேழே நாட்கள்..! எவ்வளவு சீக்கிரம் என் கல்யாண வாழ்க்கை தொடங்கியதோ அவ்வளவு சீக்கிரம் முடிந்தும் விட்டது...!

வேண்டியமட்டும் கதறி அழுத பிறகு, மரத்துப் போய் சமநிலையில் வந்திருந்தது மனது.

ஊட்டியிலிருந்து வந்ததிலிருந்தே திவாகரிடம் ஏதோ தவறு..!

பயந்து போயிருந்தால் படுக்கையில் சிறுநீர் கழிந்து விடுமாம்..

திவாகர் பயந்திருக்கிறார்..!

பயந்து ஓடியிருக்கிறார்...!

என்னை எழுப்ப முயற்சித்திருக்கிறார். கடிகாரத்தையும் தண்ணீர் பாட்டிலையும் தட்டிவிட்டு ஓடியிருக்கிறார்..

யாரோ, எதுவோ துரத்தியதைப் போல் ஓடியிருக்கிறார்...!

பால்கனியில் ஏறி நின்றிருக்கிறார்.. கீழே குதித்திருக்கிறார்... அதாவது இது தற்கொலை..! ! !

உட்புறம் தாழிடப்பட்டு அவர் மனைவி நான் அருகில் இருக்கும்போது எதைப் பார்த்து பயந்திருப்பார்?

தரையில் உட்கார்ந்திருந்த எனக்கு எதேச்சையாக பார்வை சுவர் பக்கம் போனது.

என்ன இது கிறுக்கல், நகத்தால் எழுதிய மாதிரி.. ? ?

திவாகரின் கையெழுத்து..

உ..ரு...வ...ம்.. உருவம்..! !

ஏ..ஏதோ உருவத்தைப் பார்த்துதான் பயந்து ஓடினாரா??

நான் திவாகரின் அலைபேசியில் காலரியைத் திறந்தேன்..

இது நான் திவாகரோடு தங்கியிருந்த அந்த நான்கு நாட்களில் எடுக்கப்பட்ட படங்கள்..

திவாகர் என் தோளை அணைத்துக் கொண்டும், மார்பில் சாய்த்துக் கொண்டும், கன்னத்தோடு கன்னம் ஒட்டியும்..

என்னை சோபாவில் அமர வைத்தும், கட்டிலில் சாய்த்தும், நிலைக் கண்ணாடி முன் நிறுத்தியும்..

இப்போது இந்த நிலைமையில் பார்த்தாலும் வெட்கம் வருகிறது..

கண்ணீர் பொட்டென்று விழுந்தது...!

இவை திவாகர் தனியாக இருந்த அந்த நாள் போட்டாக்கள்..

பார்த்தேன்..! ! !

அதிர்ந்தேன்..! ! !

பூப்போட்ட சோபா மேல் திவாகர் தோள் மேல் கை போடும் பாவனையில் அமர்ந்திருந்தார்.. பக்கத்தில்...

பக்கத்தில்...

யாருமில்லை..! ! ! !

யாரையோ மார்பில் சாய்த்த நிலையில் திவாகர்..

பக்கத்தில் யாருமில்லை..!

வெற்றுச் சோபா.. வெற்றுக் கட்டில் வெற்று திவாகர்..! ! !

அப்படியானால்.. அப்படியானால்..? ? ?

“ எல்லாத்தையும் முடிச்ச பிறகு ஏன் ஃபோன் பண்ணலன்னு கேட்டா என்ன அர்த்தம்? ” என்று திவாகர் சொன்னது???

நான் இங்கிருக்கும்போது...! ?

ஐயோ..! ! ஜெனிதா ஆவி என்னுருவில் வந்திருக்கிறது..! திவாகரோடு உறவாடியிருக்கிறது..! திவாகரை பயமுறுத்திக் கொன்றிருக்கிறது..! ! ! !

நான் வீல் வீல் என்று அலறினேன்..! ! ! ! !


***

பாகம் 3 ஆ

மோகனின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து

பரந்த நீல வானத்தில் பிய்த்துப் போட்ட பஞ்சாக சில மேகங்களும், திரண்ட வெண்ணெயாக சில மேகங்களும் மிதந்தன. ரொம்ப நாள் கழித்து, போக்குவரத்து சூடு பிடித்திருந்த சென்னை சாலையில் நீந்தி, பிரபல மென்ஸ் ஸ்பாவிற்குள் நுழைந்தேன்.

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று சும்மாவா சொன்னார்கள் ?? அதுவும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையென்றால் கிடைக்கிற மரியாதையே தனி. என்னை வெற்றுப் பார்வை பார்த்தவர்களெல்லாம் தேடி வந்து பேசுவதும், உதவி கேட்பதும் வாழ்க்கை புது வடிவம் எடுத்திருந்தது..! பல் டாக்டர் முகமது சவீக் - எந்திரத் தனமாக என் பற்களை சுத்தம் செய்து திரும்புபவர் இன்று அவர் மச்சினனுக்கு வேலை வேண்டுமென்று என் கை பற்றி வேண்டுகிறார்.. இவையெல்லாம் என் பிரத்தியேகத் தோல்வியை மெல்ல மெல்ல மறைத்துக் கொண்டிருந்தன..

விடாது சிணுங்கும் செல்பேசி, பயணத்துக்கு ஒரு ஏசி கார், பார்ட் டைம் டிரைவர் எல்லாமே உத்தியோகத்தின் பொருட்டு எனக்குக் கிடைத்தது. பிக் பிரைனி கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் வேலை என்பது உண்மையிலேயே அழுத்தமான பதவிதான். அந்தப் பதவிக்கேற்றாற் போல என் தோற்றமும் நடையுடை பாவனைகளும் இருக்க வேண்டும்..!

பிற்பாடு துணி வாங்க பெரிய ஷோரூம் போனேன்.. இடையிடையே அலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்..

என் காரியதரிசி பைக்கில் வந்தான்..

கல்யாண புரோக்கர் கொடுத்து விட்டுப் போனதாக ஒரு பெரிய கவரைக் கொடுத்தான். கவர் முழுக்க பெண்களின் போட்டோ..! “ எல்லாமே உங்க அந்தஸ்துக்கேத்த குடும்பம்..! பிடிச்சதை கை காட்டி விடுங்க தம்பி...! முடிக்க நானாச்சு” என்று புரோக்கர் சொல்லியிருந்தான்..

எல்லாப் படங்களும் ஒன்று போலவே இருந்தன. கல்யாணச் சந்தையில் வரப்போகும் மணமகளை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பது??

ஒவ்வொரு போட்டோவாகத் திருப்பிப் பார்த்தேன்.. பின்னால் அவர்கள் பெயர் எழுதியிருந்தது.. படித்துக் கொண்டே வந்தேன்..

செண்பகா..

மோகனுக்கு செண்பகப் பூவே வாய்க்கும் பார் என்று சரண்யா சொன்னதாக பாலா சொன்னானே?

அந்தப் பெண்ணின் போட்டோவை தனியாக வைத்தேன்..

பக்கத்து தெரு வரை போயிருந்த புரோக்கர் காரைச் சமீபித்ததும் அந்த போட்டோவையே கொடுத்தேன்..

அதன் பிறகு பல வேலைகள்..

இரவும் பகலும் மாறி மாறி வந்தன.

அன்றைக்கு போர்டு மீட்டிங் முடித்து வெளியே வந்தபோது பாலாவிடமிருந்து ஃபோன்..

“ என்ன ? ? ”

“ உளறாதேடா... சரண்யாவுக்கு அப்படி ஒரு நாளும் நடக்காது.. ”

“ நிஜமா...?? நிஜமா...?? நிஜமா...?? ”

“ கீழே விழுந்துட்டாரா?? ஸ்பாட் டெட்டா?? ஓ நோ....! ! ! ! ! ! ! ”


தொடரும்..

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Aug-17, 10:43 am)
பார்வை : 237

மேலே