ஆரம்

ஆரம் ஒன்று வாங்கித்
தாரும் எனக் கேட்டாள்
தாரம் அன்று ஒரு நாள்.

ஆரமா அது என்ன
காரம் குரலில் வெடிக்க
வட்டத்தின் பரப்பு காண
விட்டத்தில் பாதி ஆன
அலகா அது எனக் கேட்க

ஆரமே பதக்கம் முத்தாம்
ஆத்தி சந்தனமும் ஆமென
அகராதி நிகண்டு கூறும்
அருத்தமதை விரித்துச் சொல்லி
அங்கதம் என்னும் பேரில்
தோளணி ஆனது ஆதுவே
கொங்ககையில் படியும் வகையில்
தோளுயர் வனப்பு கூட்டி
ததும்பிடும் மார்பினை மீட்டி
வழிந்திடும் காஞ்சன மாலை

சரப்பொளி, மாங்காய், புளியிலை
காசென வரைபடம் போலே
வகை வகை வடிவிலிருக்கும்
மங்ககையர் விரும்பும் அதனை
சிங்கமே எனக்கும் வாங்கும்
வாரா வாரமா உங்களை
ஆரம் வாங்கிக் கேட்கிறேன்
தாராமல் போவீரோ தங்கமே!

தாய்ச் சொல் தட்டாதே
என்றவர்கள் ஏன் இங்கு
தாரம் சொல் தட்டாதே
எனச் சொல்லவில்லை
ஆரம் கேட்ட நாளிலிருந்து
ஆறாத் துயரில் நானிங்கு..

தா. ஜோ. ஜூலியஸ்.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (18-Aug-17, 4:04 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 105

மேலே