அன்பின் ஆசை
அன்பினால் வந்த ஆசை...
தொட்டில் பருவம் முதல்
தொடர்ந்து வரும் உன் அன்பில்
தொலைந்துதான் போகிறேன்!
தேடித்தேடி நீ வந்து
தெகிட்டாமல் பாசம் காட்ட
திணறித்தான் போகிறேன்!
கல்வி கற்கையிலே
கவிதை போட்டியிலே
கட்டாயம் பரிசு எனக்கே .
காரணம் -கவியினை எழிலுடன்
கலங்காமல் நான் மொழிய
கற்று தந்தது நீ தானே!
கண்ணாமூச்சி விளையாட்டில்
கண்டுபிடிப்பது நானென்றால்
வேண்டுமென்றே என்முன் வந்து
விரைவாய் என்னை விடுவிப்பாயே!
அப்பாவின் பாசக்கூட்டில்
அடங்கி விடுவோம் நாம் இருவர்
எனக்கு மட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சி
பாசக்கூட்டில் இரு போர்வை
ஒன்று அப்பா , மற்றோன்று நீ !
தொலைதூரம் சென்றாலும்
தொடர்ந்து வரும் என் அன்பு !
பேசுவது குறைந்தாலும்
பெருகி வரும் நம் அன்பு !
பெரும் அதிஷ்டசாலி நான் …
வேண்டுமென்று ஒரு பொருளை
வினாவி நான் முடிக்குமுன்னே
வீடுவந்து சேர்ந்திருக்கும் அந்த பொருள்!
அண்ணன் தங்கை சண்டையென்று
அயலவர் பேசுகையில்
ஆச்சர்யமாய் நான் கேட்பேன் -காரணம்
அன்று முதல் இன்றுவரை
அறிந்ததில்லையே நான் அதனை!
இறைவன் அவன் என்முன் வந்தால்
இறைஞ்சுவது ஒன்று மட்டுமே !
இந்த பிறவி மட்டுமின்றி
எப்பிறப்பிலும் நீயே என்
அண்ணனாகும் வரம் வேண்டும்!
---செந்தமிழ் மொழி