புராதனச் சொல்லாய் பெண்ணியத்தை மாற்றுங்கள்
அல்லியென்றும் தாமரையென்றும் அழகுமஞ்சள் நிலவென்றும்
அங்கையரை ஆராதிக்கும் ஆணினம் அகலனாய் பெண்ணிற்கு
அடுப்பங்கரைக்கும் படுக்கையறைக்கும் உரிமை சாசனம் எழுதியது
அலங்காரப் பொருளாக்கி அகலிகையாய் சபித்து ஒதுக்கியது
கருவறைக்குள் கழிவாய்போன கல்பனாத் சாவ்லாக்கள்
கள்ளிப்பாலால் சிசுவாய் கொலையுண்ட ஐரோம் ஷர்மிளாக்கள்
கருத்தறியா அகவையில் கருவை சுமந்த சானியா சிந்துகள்
காலநதியில் கரைந்துபோன ஃபீனிக்ஸ் பறவைகள்
கணையாழியை தொலைத்து மறுதலிக்கப்பட்ட சகுந்தலைகள்
கடிதாய் காதலுரைத்து மூக்கறுப்பட்ட சூர்ப்பநகைகள்
கரைசேர முடியாது குடும்ப சுமைதாங்கிடும் மணிமேகலைகள்
நெருப்பு நதியில் நீத்தி சாதகம் செய்யத் துடிக்கும் சம்யுக்தைகள்
பெண்ணுரிமை காத்திட அரசுபோடும் சட்டங்கள்
முன்னுரிமை தந்து சதவீதத்தில் ஒதுக்கீடு திட்டங்கள்
பெண்மை போற்றலாய் அரசு தெளிக்கும் சலுகைகள்
பெண்ணடிமை இன்றும் உண்டென்று பறைசாற்றும் அம்சங்கள்
தீப்பந்தங்களை கருவிழியாக்கி கயமைகளை எரித்துடுங்கள்
திராவகங்களை தீர்த்தமாய் பருகி நெஞ்சுறத்தை ஏற்றுங்கள்
தேசியக்கொடியின் செந்நிறத்திற்கு தீரச்செயலால் வலுவூட்டுங்கள்
தள்ளி ஒதுக்கிய புராதனச் சொல்லாய் பெண்ணியத்தை மாற்றுங்கள்!
கவிதாயினி அமுதா பொற்கொடி