உண்மைகள் மௌனமானால்

ஆழ்கடலாய் உண்மைகள் மௌனவிரதம் பூண்டால்....
அலைபுரவியாய் பொய்மைகள் ஆர்ப்பரித்துத் திரியும்......

பொங்கனல் பொறாமைகளை போர்த்திப் புதைத்து வைத்தாலும்....
புகைந்து பின் கொழுந்துவிட்டு பகைமையில் பற்றி எரியும்

ஆடுகள் முகமூடியிட்டு வேங்கை வேடம் இட்டாலும்.....
இடுக்குகளில் சிக்கும்போது அபயக் குரலால் அது அம்பலமாகும்....

கோட்டான்கள் குரல்களை குயிலாய் மாறிட முடியாது
வான்கோழிகள் சிறகுகள் வண்ண மயில் போல் முளைத்திட இயலாது...

சிறு ஒளிக்கு மொய்க்கும் விட்டில் பூச்சிகள் கூட்டம்
விசயம் அறிந்தால் விலகி ஓடும்....
அன்று பொய்மை தன்னந்தனி மரமாய் ஆகி இலை பூ காய் கனிகள் உதிர்ந்து ஓடாகி ஒதுங்கி நிற்கும்...

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Aug-17, 9:03 am)
பார்வை : 99

மேலே