தீரா நன்றிக் கடன்

நட்ட நடு சாமத்துல
நாதியில்லா நேரத்துல,
ஊரே தூங்கையில
உன் வைத்த நான் ஒதச்சென்...!

வைத்து வலி தாங்காம, நீ
வாய் திறந்து கத்தையில,
என்னமோ ஏதோன்னு
அக்கம் பக்கம் எழுந்துருச்சும்
எண்ணத்துக்குடி வம்புனு
எட்டிப் பார்க்க யாரும் வரல...!

கட்டுன புடவைய, நீ
கசக்கிப் பிடிச்சு கிழிக்கையில,
செத்த பொரு செல்லமேனு
அப்பன் வந்து ஆறுதல் சொன்னான்...!

என்னப் பண்ணத் தெரியலையே
யாராவது வாங்களேன்னு,
கொட்டுற மழையில, எங்கப்பன்
குல தெய்வம் கும்பிட்டுப் பார்த்தான்.
சாமம் பல கடந்த பின்னும்,
சாமி வந்து சேரலைங்க...!

அய்யோ அம்மான்னு, உன்
கதறல் சத்தம் காதக் கிழிக்க,
அடுத்த வீட்டுக் கதவ திறந்து
அறுபது வயசுக் கிழவி வந்தாள்...!

கிழவி வந்த நேரத்துல, உன்
பாதி உயிர்ப் பிரிஞ்சுடுச்சு
மீதமுள்ள மூச்ச வச்சு
எனக்குயிர் மூச்சுக் கொடுத்தியேடி...!

எந்த ஜென்மப் புண்ணியமோ
உன் மடியில நான் பொறந்தேன்,
என்ன தவம் செய்வேனோ
இந்நன்றிக் கடன் தீர்ப்பதற்கு...!

எழுதியவர் : சௌந்தர் (28-Aug-17, 11:22 am)
பார்வை : 716

மேலே