மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி....!
நெஞ்சம் கதித்து தேகம் தகித்து
உயிர்த்திரி கரிந்து உன்னுடல் எரியுது
தேய்பிறை நிலவும் பூரண வடிவாகும்
தேகம் திரைந்த பின் உன் நிலை என்னாகும்...?
கயமைகள் புகட்டிய கசந்த படிப்பினையாலே
கனன்று கமரந்து கொழுந்திட்டு எரிந்தனையோ
காலன் பறித்த உயிர் உறவாலே
கலங்கிக் குமுறி உயிர் தளர்ந்தனையோ
கடந்த காதலால் கசிகின்றாயோ
காரிகை மோகத்தில் பொசிகின்றாயோ
கலங்கள் வழிநடத்த கலங்கரை விளக்காகி
கல்லுறைந்தோர்க்கும் அஞ்சலி செலுத்துகின்றாயோ
மைவிழி இன்றி கண்ணீர் சிந்தி
மெய்யுரு உருகி தற்கொலை புரிந்தது
உயிர்ச் சுவடு சிதையாய் வெந்து
உன் தியாகத்தின் வடுவை பதிவு செய்தது
என்னுயிர் உன்னையே நேசிக்கிறது
இறையிடம் உன் ஆயுளை யாசிக்கிறது
நித்திய சிரஞ்சீவியாய் நிலைத்திடு
நின்மலன் ஜோதியாய் சுடர்விடு..!
கவிதாயினி அமுதா பொற்கொடி