கொஞ்சம் பொறுத்துக்கொள்

கொஞ்சம் பொறுத்துக்க கொள்
அன்பே கொஞ்சம் பொறுத்துக் கொள்

மிஞ்சும் என் கோபங்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
விஞ்சும் என் எரிச்சல்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்

மஞ்சம் தேடாத விலகல்களை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
அஞ்சும் என் பெண்மையை
கொஞ்சம் பொறுத்துக்கொள்

கொஞ்சம் பொருந்தாத வார்த்தைகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
நெஞ்சம் நெருடும் பார்வைகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்

தஞ்சம் தேடும் பறவையானேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்
தாய்மடி நாடும் குழந்தையாவேன்
கொஞ்சம் பொறுத்துக்கொள்

தலையணையில் விழி நனைக்கையில்
நீ தோள் சாய்த்திடு
தலைவேதனை என நினைக்கையில்
என் தலை வருடிடு

வலியில் நான் துடிக்கையில்
என் மனசின் மருந்தாகிடு
வருந்தி நான் தவிக்கையில்
என் மயில் இறகாகிடு

என் பெண்மையை நான் வெறுக்கையில்
நீ என் தாயாகிடு
உன் ஆண்மையை நான் எரிக்கையில்
நீ என் தந்தையாகிடு

உன் மேல் நான்
என்னை அறியாமல்
எரிச்சல்களை எச்சில்களாக வீசுகையில்
என் ஐயனாகிடு

நம் குழந்தைகள் மேல்
எல்லை மீறி வெடிக்கையில்
எனக்கும் அவர்களுக்கும்
அன்னையாகிடு

என் ஹார்மோன்களின் கோளாறுகளை
கொஞ்சம் பொறுத்துக்கொள்
என் உடலின் உபாதைகளை
கொஞ்சம் புரிந்துகொள்
என் பெண்மையின் வாதைகளை
கொஞ்சம் உணர்ந்துகொள்
அந்த மூன்று நாட்கள் ...

என் சோம்பலான காலையில்
நீ காபிகேளாமல் நீட்டிடு
என் சாம்பலான தீட்டினில்
நீ சாமியாகாமல் சரிசமமாகிடு

என் அன்றய சமையலில்
நீ என்கை கோர்த்திடு
நம் குழந்தைக்கு வாயில்
நீ சோறு ஊட்டிடு
முடிந்தால் எனக்கும்


நானும் குழந்தையாகிட
நீயும் தாயாகிட
அந்த நாளும் கடந்திடட்டும்

ஓடமாய் நான் ஓய்ந்திட
நீயும் என் துடிப்பாகிட
அந்த நாளும் கரைசேர்ந்திடும் ....

எழுதியவர் : யாழினி வளன் (29-Aug-17, 8:32 am)
பார்வை : 832

மேலே