பால்ய சினேகிதனின் சினேகிதி
நெடுநாளுக்கு பின்பு எதோச்சையாய் பார்த்த அருணை கடந்து சென்று,முடியாமல் மீண்டும் திரும்பி வந்து பார்த்தான்.
அவன் முகத்தில் விரக்தியை விட குற்ற உணர்வு அதிகமாய் தெரிந்தது.
டேய் அருண் மாலதிக்கு இன்னைக்கு கல்யாணம் வாரீயாடா போய் பார்த்துட்டு வருவோம்.
ரொம்ப ஆசையா இருக்குடா அவ மணப்பெண் அலங்காரத்துல மேடையில உட்கார்ந்து இருப்பதை பார்க்க,தாலி கட்டுறதுக்குள்ளே எழுந்து வந்துருவோம்டா ப்ளீஸ்டா என கார்த்திக் கெஞ்சவும்,
உந்துவண்டியில் இருவரும் ஏற,வண்டி சக்கரம் முன்னோக்கி நகர்ந்தது மண்டபத்தை நோக்கி..
காலச்சக்கரம் பின்னோக்கி சுற்றி அவர்கள் மூவரும் சேர்ந்து படித்த கல்லூரியில் வந்து நின்றது..
அப்போது இறுதி தேர்வு நெருங்கி கொண்டிருந்தது ..
அந்த வகுப்பில் படிக்கும் மாலதி மேல அவனுக்கு ஓர் ஈர்ப்பு போல,
தெரிந்திருந்தும் அருண் அதை பற்றி ஏதும் பேசியதில்லை..
ஒருநாள் மாலையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அருண் நீ ஒரு உதவி செய்யனும்,
எனக்கு எப்படி சொல்லுறதுனு தெரியலை அவளை பார்த்தா மனசுக்குள் ஏதோ ஒருவித ஆயாச படபடப்பு இன்னும் இருக்குடா எனக்கு பேச பயமாவே இருக்கு.அவ நல்லா படிக்குற பொண்ணுடா.உனக்குதான் தெரியுமே எனக்கும் படிப்பிற்கும் உள்ள தூரம்..நீதான் நல்லா படிக்கிற பையனாச்சே நீ அவகிட்ட பேசுறதும் ஈஸி.அது இல்லாம வகுப்பை பொறுத்தவரை அவளுக்கும் உன் மேல கொஞ்சம் மரியாதை இருக்குடா எனக்காக கொஞ்சம் என்ன பத்தி ஏதாச்சு நல்லவிதமா சொல்லுடா..எப்படியாச்சு இறுதி தேர்வு முடியுறதுக்குள்ளே நான் விரும்புறேன்னு அவகிட்ட சொல்லிருதேன்டா என்று பேசிவிட்டு அருணின் முகத்தை பார்த்து தன் நெற்றியை சுருக்கினான் கார்த்திக்..
ம்ம்ம் பேசுறேன்டா ஆனால் இதுலாம் சரியா நடக்குமானு தெரியலை.நானும் அவ கூட பேசத்தான் செய்யுறேன் அதுவும் பாட சம்பந்தமாகதான்.எதுக்கும் முயற்சி பன்னுறேன் என்க அதீத சந்தோசத்துடன் சென்றான்..
அன்றிலிருந்து அவன் எப்போது என்ன பேசினாலும் கடைசியில் மாலதி என்ற பெயரில் வந்தே முற்று பெற்றது..ஹார்மோன்களின் தூண்டுதல் பற்றி அறிந்திருக்கவில்லை..
காதலா நட்பா என பிரித்து அறிந்து புரியும் எந்த நிலைப்பாடும் அந்த வயதில் அந்த தருணத்தில் தேவைப்படவும் இல்லை..
அன்று இறுதி தேர்வின் கடைசி நாள்..
கார்த்திக் சொன்னவாறே மாலதியிடம் பேசி கொண்டிருந்தான்..
கார்த்திக் பேசி முடித்து முகத்தில் எவ்வித சலணமும் இல்லாமல் திரும்பி வந்தான்..
என்னடா ஆச்சு,பேசுனியா,என்ன சொன்னா என கேள்வியை அடுக்கினான் அருண்.
அவளுக்கு உன்னை பிடிச்சுருக்காம் நான் அவகிட்ட பேசுறதுக்கு முன்னாடியே அவ என்கிட்ட பேசிட்டா.உன்னிடம் சொல்ல சொல்லி என்னிடம் சொல்லுறாடா என்று குரல் கம்மினான் கார்த்திக்..
டேய் அவளை நான் அப்படிலாம் நினைச்சு கூட பார்க்ககலைடா அதுவும் நீ பாக்குறனு தெரிஞ்சும் அதை எப்படிடா நான் ஏத்துக்குருவேன்.என்னிடமே வந்து இதை சொல்லுற என்ற அருணின் பதிலை காதில் வாங்கி கொள்ளாமலே நெடுந்தூரம் சென்று விட்டிருந்தான் கார்த்திக்..
மீண்டும் நெடுநாள் கழித்து இன்றுதான் காத்திக்கை பார்க்கிறான் அருண்.
இருவரும் மண்டபத்தை அடைந்தனர்..
சுவரொட்டியில் மாலதியின் பெயர் அருகே வேறொரு ஆடவனின் பெயரை பார்த்ததும் விழிகளில் ஈரம் கசிய,அவ நல்லா இருக்கட்டும் என்னால அவளை மணமேடைல இன்னொருத்தன் கூட பார்க்க முடியாது வா போய்ருவோம் என சொல்லிக்கொண்டே மீண்டும் ஒருமுறை நான் சொல்ல வருவதை காதில் வாங்கி கொள்ளாமல் திரும்பி பாராமல் சென்றான் கார்த்திக்.
ஐந்து வருடங்கள் கழிந்தது அருண் மேற்படிப்பிற்க்கு வெளிநாடு சென்று விட்டு திரும்பியிருந்தான்..
எதோச்சையாய் தெருவில் பார்த்தான்.அங்கு மாலதி தன் பிள்ளைகளுடன் நடந்து போய்கொண்டிருந்தாள்..
அதை தொடர்த்து பார்த்த கண்களுக்கு ஓர் இடத்தில் நிலைகுத்தி கண்ணீர் வழிந்தது..
ஐந்தாம் வருட கண்ணீர் அஞ்சலி என்று கார்த்திக்கின் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டியை பார்த்து..