பெண் அரசியல் சட்டமன்றத்தில் நடந்தது நிஜமா அந்த நாள் ஞாபகம் வந்ததே

மதுரை மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்று துவரிமான். இங்கே அழகென்று நான் குறிப்பிடுவது அந்தக் கிராம மக்களின் போராட்டக் குணத்தையும் உணர்வையுமே. 1954-ல் மதுரை மாவட்ட கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டவர் தோழர் கே.பி.ஜானகியம்மாள். குத்தகை விவசாயிகளுக்கான போராட்டத்தை அவர் இங்குதான் தொடங்கினார்.

ஏராளமான காவலர்கள் கைகளில் துப்பாக்கிகளோடு வரப்புகளில் காத்திருக்க, அவற்றைத் துச்சமென மதித்து மிகுந்த துணிச்சலோடும் அந்தக் கிராமத்தின் மக்களோடும் நிலத்தில் இறங்கி உழவுப் பணியைத் தொடங்கினார். வேறு வழியில்லாத அதிகாரிகள் அவரைக் கைது செய்ய முயன்றபோது ஆவேசமுற்ற மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தடுத்து நிறுத்தினார்கள்.

தோழர் கே.பி. ஜானகியம்மாள் களப் போராளி மட்டுமல்ல. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறை வைக்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் அரசியல் பெண்மணியும்கூட. பின்னாளில் அதற்கான தாமரைப் பட்டயமும் உதவித்தொகையும் வழங்க அரசு முன்வந்தபோது, “எனது கடமையை நிறைவேற்றியதற்கு நீங்கள் ஏன் சன்மானம் வழங்க வேண்டும்?” எனக் கேட்டுத் திருப்பி அனுப்பினார். பொதுவுடைமைக் கட்சியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக 1967-ல் மதுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவருக்குப் பின்னால் தோழர் பாப்பா உமாநாத் இரண்டாவது பெண் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழகத்தின் நெருக்கடி மிகுந்த அரசியல் சூழலில் செயல்பட்டார்.

‘பொம்பளை சிரிச்சா போச்சி புகையிலை விரிச்சா போச்சி’ என்ற பழமொழியோடு ஒர் உறுப்பினர் பேசத் தொடங்கினார். “அந்த அதிசயமான புகையிலை எந்த கம்பெனியைச் சேர்ந்தது என உறுப்பினர் சொல்ல முடியுமா?” என பாப்பா உமாநாத் அதே கேலியோடு மடக்கினார். பழமொழி என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தினார்.

பெண்ணுரிமை இயக்கத்தின் முன்னோடியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த பாப்பா அவர்களுக்குச் சோதனையாகவே அந்தச் சபையில் திடீரென ஒரு சம்பவம் நடந்தேறியது.

அ.இ.அ.தி.மு.க.வினர் பிரதான எதிர்க்கட்சியாக 27 உறுப்பினர் களைக் கொண்டிருந்தார்கள். சட்டப்பேரவையின் முதல் எதிர்க்கட்சிப் பெண் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த நேரமது. சபை விவாதத் தின்போது பெருமளவு வார்த்தை தள்ளுமுள்ளுகள், அதனைத் தொடர்ந்து சண்டை சச்சரவுகள், கூச்சல் குழப்பங்களைக் கடந்து ஆளும் கட்சியான தி.மு.க.வின் உறுப்பினர்களால் எதிர்க் கட்சித் தலைவர் தாக்கப்பட்டார் என்ற செய்தி பரபரப்பைக் கூட்டியது.

தீ போன்று பரவத் தொடங்கிய இந்தச் சம்பவத்தில், ‘ஒரு பெண் என்றும் பாராமல்…’ என்பதே எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டாக இருந்தது. ஆளும் கட்சியான தி.மு.க.வோ, “நாங்கள் அப்படித் தாக்கவில்லை” என்ற பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் சபை நடவடிக்கைகளில் இருந்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சி சாராத பெண் உறுப்பினர்கள் என்ற முறையில் மார்க்சிஸ்ட் கட்சி தோழர் பாப்பா, காங்கிரஸ் கட்சி ஏ.எஸ்.பொன்னம்மாள் இருவரும் சாட்சியமானார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்படவில்லை என பாப்பாவும், தாக்குதலுக்குள்ளானார் என பொன்னம்மாளும் நாளேடுகளில் தெரிவித்திருந்தார்கள்.



இதில் எது உண்மை? இப்போது இருப்பதைப்போல கணக்கில் அடங்காத ஊடகங்கங்கள் அப்போது இல்லை. நாடும் நாளேடுகளும்

இரு பிரிவாகவே இந்த விஷயம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தன. இயக்கத்துக்குள் வந்த புதியவர் களான என் போன்றோருக்குத் தோழர் பாப்பாவும் இயக்கமும் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. “பெண்ணே பெண்ணுக்கு எதிரியா?” என்று கேட்ட நாளேடுகளின் வாசகர் கடிதங்களுக்குப் பதிலடியாகச் சரமாரியாகக் கடிதம் எழுதினோம். ஆனால் அந்தக் கடிதங்கள் பிரசுரமாகவில்லை என்பது தனிக்கதை. எங்களுடைய மாத ஏடான ‘மகளிர் சிந்தனை’யில் மட்டுமே அவை வெளியாகின. வாதங்களும் பிரதிவாதங் களுமாகத் தமிழகத்தின் அரசியல்களம் முதன்முதலாகப் பெண்ணை மையப் பொருளாகக் கொண்டு நகரத் தொடங்கியது அப்போதுதான்.




(முழக்கம் தொடரும்)
கட்டுரையாளர்,
பாலபாரதி .முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

எழுதியவர் : (31-Aug-17, 1:23 pm)
பார்வை : 140

மேலே