என்ன நினைத்தாய்?
மூன்றாம் முறை மூச்சுக்கு
நீ தவித்து நீர்மட்டம் தொட்டபோது
என்ன நினைத்தாய்?
தொல்லையானதென்றாலும்
தொலைத்துவிட நினைத்திருக்க மாட்டாய்
உன் வாழ்க்கையை !
கனவிலும் தவிக்கவிட
நினைத்திருக்க மாட்டாய்
உன் தொப்புள்கொடி உறவை !
விளையாட்டுத்தனத்தால் விளைந்த
விபரீத கணம் அதுவென்று
உணர்ந்து நீ துடித்தாயா?
ஒருமுறை -ஒரே ஒருமுறை
வாய்ப்புக்கொடு இறைவா என
ஊமைக்குரல் எழுப்பிக் கதறினாயா ?
எது எப்படியோ?
நிச்சலனமாய் நீள் உறக்கத்தில் நான் கண்ட
உன் முகம் ஆழ் மனதில் உறங்கி
அவ்வப்போது விழிக்கிறதே
அது விதியா?
என் சோக சாகரத்தில் நீயுமா
ஓர் துளி?
வாழ்க்கை புகட்டிய அதிர்ச்சிப்
பாடங்களில் நீயுமா ஒரு
அத்தியாயம்?
[நீரில் மூழ்கி வாழ்வைத் தொலைத்த என் மாணவக் கண்மணிக்கு சமர்ப்பணம் ]