​​ராசியான மோதிரம்

​அலுவலகம் முடிகின்ற நேரமது . பிரகாஷ் அவசர அவசரமாக தன வேலையை முடிப்பதில் வேகம் காட்டினான் . அதற்காக அந்த கம்ப்யூட்டரிடம் தனியாக ஏதோ பேசிக்கொண்டே தட்ட ஆரம்பித்தான் . அவனைத் தாண்டி சென்ற ரமேஷ் , என்னடா பிரகாஷ் அவசரமா ...வெளியே எங்கு போகிறாயா...இத்தனை வேகத்துடன் செயல்படுகிறாயே என்றான் . இல்லை ரமேஷ் ...ஒரு அவசர காரியமாக வீட்டிற்குப் போக வேண்டும் . ஆனால் மேனேஜர் உடனே இதை முடித்துவிட வேண்டும் என்று கூறிவிட்டார். அதான் அந்த ரிப்போர்ட் எடுப்பதற்கு சற்று வேகப்பட்டேன் . உடனே ரமேஷ் , அப்படியானால் நீ புறப்படு பிரகாஷ் , நான் பார்த்து முடித்து கொடுத்துவிட்டு போகிறேன் , எனக்கு ஒன்றும் வேலை இல்லை என்றான் உதவிடும் எண்ணத்தில் . இக்காலத்தில் இப்படி கூறுபவர்களே மிகவும் குறைவுதானே ... உண்மை நண்பன் என்று நினைக்கிறேன் . உடனேயே பிரகாஷுக்கு உச்சிக் குளிர்ந்து உள்ளம் நிறைந்தது ....மிக்க நன்றிடா மச்சான் ...நான் கிளம்பவா...இதில் உள்ள தேவைகளை படித்து அறிந்து முடித்துக் கொடுத்துவிடு ....ரமேஷ் நாளை காலை காபி என்னோடதுதான் ....மத்தியானம் சாப்பாடும் என்னோடுதுதான் ...ஓகே டீலா ...என்று சிரித்தவனை ரமேஷ் உடனே டபுள் ஓகேப்பா என்று பதிலுக்கு சத்தமாக சிரித்தான் .

அப்படி என்ன அவசர வேலை பிரகாஷுக்கு ...மனதிற்குள் சுழன்றது ரமேஷுக்கு ...ஆனாலும் நாளை கேட்கலாம் என்று விட்டுவிட்டான் .

அன்று மதியம் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது பிரகாஷுக்கு . அழைத்தவர் அவன் மனைவி ரேணுகா . எடுக்கும்போதே மிகவும் படப்படப்புடன் பேசினாள் . பிரகாஷ் எனக்கு மனசு சரியில்லை ...எனது வைர மோதிரம் காணாமல் போய்விட்டது ...தேடித் பார்த்தேன் வீடு முழுவதும் ....கிடைக்கல ...எவ்வளவு ராசின்னு உன்கிட்ட சொல்லி இருக்கேன் ...ரொம்ப பயமா இருக்கு ....ஏதோ நடக்கப் போகுது ....என்று அழுது கொண்டே பேசினாள் . சரி சரி அழாதே ...நான் வருகிறேன் சீக்கிரம் . அழாமல் இரு . எந்த கற்பனையையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ளாதே . உடனடியாக போனை துண்டித்து சற்று நேரம் யோசிக்க ஆரம்பித்தான் . அதன்பின்பு தான் மேனேஜர் அறைக்குச் சென்று அவசரமாக வீட்டிற்கு செல்ல அனுமதி கேட்டபோது அவர் இந்த வேலையை முடித்துவிட்டு செல்லுமாறு கூறிவிட்டார் . அதன்பின் நடந்ததுதான் முதலில் கூறிய நிகழ்வு.

நேராக வீட்டிற்கு சென்றவன் வேகமுடன் உள்ளே நுழைந்து ரேணு , ரேணு என்று அழைத்தான் . அவளோ பதில் ஏதும் கூறாமல் சோபாவில் அமர்ந்து கண்டு விசும்பிக் கொண்டிருந்தாள் . அருகில் அமர்ந்தவன் அவளை அணைத்தபடியே ஆறுதல் கூற ஆரம்பித்தான் . இதென்ன நீ வேண்டுமென்றா தொலைத்தாய் ....ஏதோ நடந்துவிட்டது...யார்தான் என்ன செய்ய முடியும் ...நீ கேட்டுத்தான் வாங்கி கொடுத்தேன் ..மறுபடியும் வேறு ஒன்று வாங்கிக்கொள்ளலாம் ...விடு . இதற்காக வருத்தப்பட்டு அழுவதால் என்ன நடக்கப்போகிறது என்றான் . அவள் நிமிர்ந்து வழியும் விழிகளுடன் அவனை நோக்கினாள் ...எப்படிங்க உங்களால் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது ? நாம் என்ன கோடீஸ்வர குடும்பமா ..அல்லது அரசியல்வாதிகளா ...மீண்டும் உடனே சம்பாதித்துக்கொள்ள ...? அதுமட்டுமல்ல பிரகாஷ் எனக்கு ரொம்ப ராசியாக இருந்தது ...உங்களிடமே பலமுறை சொல்லி இருக்கிறேனே ...ஆனால் அது என்னைவிட்டு போய்விட்டதே ...பயமாக உள்ளது என்றாள் . அவன் உடனே ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறாய் ...என்ன நானே உன்னைவிட்டு போன மாதிரி ....உரக்க சிரித்தான் . இதில் ராசி எங்கு வந்தது ? அதெல்லாம் நீ பார்ப்பதால்தான் உனக்கு இப்படி தோன்றுகிறது. நீ படித்தவள் ..பகுத்தறிவோடு சிந்திக்கப் பழகு என்று நானும் பலமுறை கூறிவிட்டேன் . நீ மாறவே இல்லை . நாம் சம்பாதித்து சேமித்து வாங்கியது அந்த மோதிரம் . இதில் ராசி என்ன இருக்கு ? அது தொலைந்துவிட்டதால் நம் வாழ்க்கையே தொலைந்துவிடுமா என்ன ? இதெல்லாம் நமது கற்பனை ..தேவையில்லாத சிந்தனை ...அதை மறந்துவிடு...இதுவும் நம் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சிதான் ...மீண்டும் வேண்டுமானால் நாம் கடைவீதி வரை சென்று தேடுவோம் ...நீ சென்றுவந்த அந்த இடங்களில் கேட்போம் ... அழுவதை நிறுத்து....முதலில் காபி போடு ...இருவருக்கும் சேர்த்து என்று கூறிவிட்டு ஆடையை மாற்ற ஆரம்பித்தான் . ரேணுகா அவனை வியப்போடு பார்த்தாள் ...
நம்மால் இவரைப்போல இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவள் பார்வையில் தெரிந்தது .

மறுநாள் பிற்பகல் ரேணுகா சிறிது அசதியாக இருந்ததால் சோபாவில் சாய்ந்தபடியே தூங்கிவிட்டாள் . ஒருவேளை நேற்று இரவெல்லாம் அந்த மோதிரத்தையும் அதன் ராசியைப்பற்றியே நினைத்து விழித்திருந்தாளோ என்னவோ தெரியவில்லை...மொபைல் அழைப்பு ஒலிக்கேட்டு சட்டென்று விழித்தாள் . உடனே பக்கத்தில் இருந்த போனை எடுத்து பார்த்தால் , பிரகாஷ் அழைப்பது தெரிந்ததது . ஏன் இந்த நேரத்தில் கூப்பிடுறார் என்று குழப்பத்தில் எடுத்து என்ன பிரகாஷ் ..இந்த நேரத்தில் திடீரென்று எனக் கேட்டாள் . அந்தப்பக்கத்தில் பிரகாஷ், ஒரு முக்கிய செய்தி என்றான் . அப்படியா ..சீக்கிரம் சொல் ஆவலுடன் ...என்றதும் அவன் அந்த மோதிரம் ராசியே இல்லைதான் ரேணு ...நீ கூறியது மிக சரிதான் என்றதும் மேலும் அவளுக்கு அதிர்ச்சியில் சத்தமாக பேசினாள் ...ஏன் , என்ன நடந்தது ....ஏதாவது விபரீதமா ....ஆபிசில் ஏதாவது பிரச்சசினையா உனக்கு ...என்று அடுக்கிக்கொண்டே போனாள் . வேண்டும் என்றே பிரகாஷ் சிறிய இடைவெளிவிட்டு பேசினான் . என்ன ரேணு பயந்து விட்டாயா ...நல்ல இனிப்பான செய்திதான் . இன்ப அதிர்ச்சி நமக்கு என்றான் . என்ன கூறுகிறாய் ...சீக்கிரம் சொல் ...தலையே வெடித்துவிடும் எனக்கு என்றாள் .

எனக்கு பிரமோஷன் கிடைத்துள்ளது . அதுவும் சிங்கப்பூர் கிளை மேனேஜராக ...என்றதும் ..அய்யோ பிரகாஷ் நிச்சயமாகவா ....என்று துள்ளி குதித்தாள் . வாழ்த்துக்கள் சார் ...நமக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் பிரகாஷ் என்று சட்டென்று கூறியதும் , என்ன ரேணு , நீதான் நேற்று உன்னுடைய ராசியான மோதிரம் தொலைந்துவிட்டது .அவ்வளவுதான் நம் வாழ்க்கையே இனி துன்பம்தான் என்றாய் ...ஆனால் இன்று மாற்றி பேசுகிறாய் என்றான் கிண்டலாக . உடனே அவள் பேசமுடியாமல் மௌனமானாள் . அவன் தொடர்ந்தான் ....நீதான் அந்த மோதிரத்தை அப்படி பெருமையுடன் கூறினாய் ...ராசி என்றும், அதிர்ஷ்டமானது என்றும். ஆனால் பார்த்தாயா , எனது உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைத்த பரிசை ....இனியாவது அந்தமாதிரி மூட நம்பிக்கையெல்லாம் வைக்காதே ...என்றதும் அவள் உடனே அழத் தொடங்கினாள் .... அவன் உடனே இல்லை நான் ஜோக்காக கூறினேன் . இன்று மாலை நாம் வெளியில் சாப்பிட போகிறோம் . ரெடியாக இரு ...இந்த மகிழ்சசியை கொண்டாட வேண்டாமா ....இனி ராசியெல்லாம் பார்க்காமல் , எந்த ஹோட்டல் என்று முடிவு செய்துவை ...நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று சிரித்தான் .

ராசி எனபதும் அதிர்ஷ்டம் எனபதும் மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் . ஆகவே அதைப்பற்றி சிந்தித்து நேரத்தை வீணாக்காமல் , உழைப்போம் , உண்மையாக இருப்போம் , உயர்வோம் .
பகுத்தறிவுடன் வாழ்வோம் . சமுதாயத்திற்கு பயனுள்ளவனாக வாழ்வோம் .


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (1-Sep-17, 3:47 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 311

மேலே