மாலாவின் டைரி

" அவள் ரொம்ப தைரியபான பொண்ணு. ஏன் இப்படி பண்ணிக்கிட்டா? ", என்று ஊரெங்கும் ஒரே சலசலப்பு...

" யாரு அம்மா? என்ன பண்ணிக்கிட்டாங்க? ", என்று கேட்டான் வெளியூரில் இருந்து வந்த ஜான்...

" அவங்க எல்லாரும் மூன்றாவது தெருவில் நாலாம் நம்பர் வீட்டில் குடியிருந்த மாலாவைப் பற்றி பேசுறாங்க பா. " என்று ஜானின் தாய் மேரி பதிலளிக்கக் கேட்ட ஜான் கலக்கமடைந்தான்...
மேலும் அவனுடைய அம்மாகிட்ட, " அவ என்ன பண்ணிக்கிட்டா மா? ", என்றான்...

" இரண்டு நாளைக்கு முன்னாடி அவ அறையில தூக்குப் போட்டுக் கிட்டா பா. ", என்று அம்மா சொன்னதுமே ஜானின் முகத்தில் அப்படி ஒரு அதிர்ச்சி...
அதோட கண்ணீரும் வழிந்தோடியது...
இளமையில் ஜானின் கல்லூரி தோழி அவள்...

எப்போதும் சந்தோஷமாகவும், கலகலப்பாகவும், தைரியமாகவும் இருப்பாள்...
அவள் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? என்ற கேள்வியால் தூண்டப்பட்ட ஜான் அதுபற்றிய விசாரனையைத் தொடங்கினான்...

அவளுடைய வீட்டைச் சுற்றி இருந்தவர்களிடம் விசாரித்த போது, ஏறத்தாழ எல்லாருடைய பதிலும் ஒரே மாதிரியாகத் தான் இருந்தது...

" மிகவும் நல்ல பெண்.
அவள் இருக்கும். இடத்தில் உற்சாகமும், கலகலப்பும் இருக்கும்.
புத்திசாலியானவள்..
ஆனால், ஏன் இப்படி செய்து கொண்டாளென்றே தெரியவில்லை... ", என்பதாகவே இருந்தது...

கதவு திறக்கப்படவில்லை...
உண்மை புலப்படவில்லை...
கவலையோடு படுக்கையில் படுத்து கண்களை மூடி அயர்ந்தவன் கடந்த கால காட்சிகளுக்கு அகப்பட்டான்...

மாலாவுடான முதல் சந்திப்பு மற்றும் உரையாடல்கள் எல்லாம் நினைவுக்கு வர, அவள் அடிக்கடி இயேசு பற்றி விவாதித்தது ஞாபகம் வந்தது...
விழித்தெழுந்தவன் தூக்கம் வராமல் உலாவிக்கொண்டே இருந்தான்...

விடிந்ததும் முதல் வேலையாக மாலாவின் அறைக்கு யாருக்கும் தெரியாமல் சென்றான்...
மாலாவின் அப்பா, அம்மா வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களின் அக்கறையும் அன்பும் எப்போதும் அவளுக்குக் கிடைத்ததில்லை...

மாலாவின் அறையில் பல விதமான விசித்திரமான படங்கள் இருந்தன...
எதாவது இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தான்...
எதுவும் இல்லை...

வீட்டிற்கு பின்னால் ஒரு தொட்டம் இருந்தது...
அங்கு நாய் குலைக்கும் சப்தம் கேட்டது...
ஜான் சென்று பார்த்தான்...
அந்த நாய் குலைத்துக் கொண்டே தரையைத் தோண்டியது...

ஜான் அந்த நாய் விரட்டிவிட்டு அந்த இடத்தைத் தோண்டினான்...
அதில் ஒரு தோல்பை பாலீதீன் பையால் சுற்றப்பட்டு அதைச் சுற்றி சங்கிலியால் கட்டப்பட்டு அந்த சங்கிலியுடன் ஒரு சிலுவை இணைக்கப்பட்டு இருந்தது...
அதை எடுத்துக் கொண்ட ஜான் தனது வீட்டை நோக்கிச் சென்றான்...

அதை பிரித்து தொல் பையைத் திறந்து பார்த்தான்...
அதில் ஒரு பைபிளும், ஒரு டைரியும் அதோட ஒரு கடிதமும் இருந்தது...

அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவுடன் ஜான் மிகவும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தான்...

அந்தக் கடிதத்தில், "

அன்பு நண்பன் ஜானுக்கு,

இந்தக் கடிதத்தை நீ கண்டிப்பாகப் படிப்பாய் என்று தெரியும்.
நீ படிக்கும் போது நான் இந்த உலகில் இருக்கமாட்டேன்...
காரணமில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்று நீ அடிக்கடி சொல்வாய்...
அதை முழுசா உணர்ந்திருக்கிறேன் என் வாழ்வில்...
சரி, தவறு இந்த இரண்டையும் பிரித்தறியும் பகுத்தறிவு இருந்தும் மனிதர்களில் பல நடவடிக்கைகள் பலரைப் பாதிக்கும் விதமாகவே உள்ளது...
அதைப் பற்றி என் டைரியில் எழுதி இருக்கேன்...
அதை படி... எல்லாருக்கும் சொல்லு...
உண்மையான கடவுளைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளட்டும்...

இப்படிக்கு,
உன் கல்லூரி தோழி மாலா... ",

என்று எழுதியிருந்தது...

வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஜான் பைபிளைப் பார்த்தான்...
பழைய ஏற்பாடாக இருந்தது...

டைரியைப் படிக்கத் திறக்கும் போது, ஜானின் அம்மா, " ஜான்! ஜான்! ", என்று பதறிக் கொண்டே தேடி வந்தார்கள்...
" என்ன அம்மா? ", என்று ஜான் கேட்க, அவனைக் கண்டதும் மேரியம்மா சிறிது ஆறுதலடைந்தாலும் கலக்கமடைந்தே காணப்பட்டார்கள்...

" ஏன்மா? ", என்ற ஜானிடம், " உன்னை பலர் கூடிக் கொலை செய்யக் கண்டேன் மகனே... ", என்று கூறி தாயானவள் தவித்தாள்...
" கவலைப்படாதீங்க அம்மா. எனக்கு அப்படியெல்லாம் எதுவும் நடக்காது... ", என்று தாய்க்குத் தேறுதல் கூறினான்...

இருப்பினும் அவன் தாய் அவனுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டார் தினமும்...

ஜான் மாலாவின் டைரியை படிக்கப் படிக்க அவனுக்குள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படத் தொடங்கியது...
அந்த டைரியுடனேயே அதிக நாட்களைச் செலவிட்டான்...
திரும்பத் திரும்ப அந்த டைரியின் வரிகள் ஜானுக்கு மனதில் பதிந்தன...
பல உண்மைகள் புரிய ஆரம்பித்தது...
இந்த உலகத்தைப் பற்றியும், அதன் போக்கு பற்றியும் எழுதப்பட்டு இருந்தன...

அதில் இருந்த மர்மங்களை ஜானால் உணர முடிந்தது...

இவற்றைப் பற்றி ஜான் மேலும் மேலும் நடைமுறையில் பல வினோதமான நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது...
அவற்றின் மூலம் அவன் மாலாவின் வார்த்தைகள் உறுதிப்படக் கண்டான்...

வெறித்தனங்களுக்கு அடிமையான உலகத்தில் போராட்டமும், கலவரமும் ஓய்ந்தபாடில்லை...

ஜான் ஒரு முறை வெளியூருக்கு தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தான்..
அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது...
எதிர்பாராத விதமாக ஜானின் காரை இடைமறித்த கும்பல் அவனைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு ஓடிவிட்டன...

ஜான் மரணத்தைத் தழுவும் தருவாயில், அவன் தாய் சொன்ன வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்தன,
" உன்னை பலர் கூடிக் கொலை செய்யக் கண்டேன் மகனே... ", என்று...

மறுநொடி மாலாவின் கடிதத்தைப் பற்றி நினைத்தான்...
" என்னை மன்னித்துவிடு மாலா...
உன் நம்பிக்கையை நிறைவேற்றாமல், காப்பாற்றாமல் பாவியாக மடிகிறேனே கொலையுண்டு... " என்றவன் உயிர் உடல் விட்டு நீங்கியிருந்தது...

மாலாவின் டைரி மீண்டும் மறைந்துவிட்டது ஜானின் அறைக்குள்
தேடிப்பார்த்து கிடைக்கவில்லை என்பதைவிட தேட யாருமில்லை என்பதால்...
அதில் என்ன உண்மைகள் உள்ளன? என்ற தேடல் மட்டும் தொடர்கிறது...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Sep-17, 10:42 pm)
பார்வை : 861

மேலே