அனிதா எனும் அணையா விளக்கே
அவசரப்பட்டு
அணைந்துவிட்டது
அனிதா எனும்
அகல் விளக்கு !
ஆம் சகோதரி
நீ கொஞ்சம்
நிதானித்திருக்கலாம் !
உன்னால் ஓராயிரம்
விளக்குகள்
ஒளி பெற்றிருக்கும்
நீ கொஞ்சம்
அவசரப்பட்டு விட்டாய் !
உடல் நோய்க்கு
மருத்துவம் கற்க
முடியாமலா உன்
உயிரை மாய்த்துக்கொண்டாய் !
அப்படியானால்
இங்கே படிந்திருக்கும்
கலப்படக் கறைகளை
யார் களைவது ?
லஞ்ச ஊழல்களை
யார் வேரறுப்பது ?
சாதி அரசியலுக்கு
யார் சாவுமணி அடிப்பது !
இணைய வெளிச்சத்தில்
தொலைந்துவிட்ட
இளைய தலைமுறையை
யார் தட்டி எழுப்புவது ?
அறுக்கப்பட்ட தாலிகளையும்,
பறிக்கப்பட்ட உயிர்களையும்,
சூறையாடப்பட்ட கற்பையும்
அப்படியே மறந்துவிடலாமா ?
அடுத்த தலைமுறையும்
அடிமையாகத்தான்
வாழ வேண்டுமா ?
அச்சடித்த நோட்டுக்கள்தான்
நம்மை ஆள வேண்டுமா ?
இல்லை !
நாறிக்கிடக்கும் சமூகத்தை
நாம்தான் மாற்ற
வேண்டும் !
நோய்க்கு மருந்தும் ,
அறிவுக்கு விருந்தும்
நாமே ஆக வேண்டும் !
நம்மை நாம்தான்
ஆள வேண்டும் !
இனியொரு அனிதாவை
நாம் இழக்க கூடாது !
இனி புதிதாய் பிறப்போம் !
புது யுகம் படைப்போம் !
தமிழினமே இனியாவது
தலை நிமிர்ந்து வாழ்வோம் !