அழகு மனையாள்

"அழகென்ப துண்மை அழகென்ப துச்சம்
அழகென்ப தெல்லாம் அவள் !"

அழகென்னும் பெண்ணாளை மணந்து கொண்ட
. அப்புறம்தான் என்வாழ்வில் வசந்த காலம் !
எழவைத்தாள் எப்போதும் ஏகாந் தத்தில்
. என்னோடு குலவிபல கவிதை ஈன்றாள் !
விழவைத்தாள் விழுகையிலே மெத்தை ஆகி
. வீழ்கின்ற எனைத்தாங்கி விந்தை செய்தாள் !
அழவைத்தாள் சிரிப்பிற்கும் ஆதி ஆனாள்
. அன்னாளைக் காதலினால் வென்று விட்டேன் !

பார்க்கின்ற இடமெல்லாம் அவளின் சோதி
. படர்கின்ற தென்றுரைப்பேன் என்னா ணைக்கே
வேர்க்கின்ற அழகென்றன் மனையாள் ஆவாள்
. வென்றவன்நான் அவளிடமும் அடிமை பூண்பேன் !
சேர்க்கின்ற சேர்ப்பெல்லாம் அவளின் சேர்ப்பு
. சகந்தன்னில் அவளின்றி வாழ்க்கை இல்லை !
ஆர்க்கின்ற மலையருவி அசையும் தென்னை
. ஆழத்தின் குகையெல்லாம் அவளால் கண்டேன் !

மாடத்தில் ஒளியாவாள் ! மாலை வேளை
. மலராவாள் நிழலாவாள் ! மயங்கி வீழும்
கூடத்தில் மதுக்கின்னம் கையில் ஏந்திக்
. கொண்டூட்டும் கவியாவாள் ! ஆற்றி லோடும்
ஓடத்தின் அசைவினிலும் அலையின் கீத
. ஒய்யாரப் பாட்டினிலும் கண்ணிற் றோன்றி
பாடத்தான் வைத்திடுவாள் ! அழகென் தேவி
. பார்வைக்குக் குமரியவள் பழமைக் காரி !

தாயென்றால் அரவணைப்பாள் தந்தை என்றால்
. தாரணியில் பலபாடம் காட்டி நிற்பாள் !
சேயென்றால் குழைந்திடுவாள் ஓடி யாடிச்
. சேட்டைகள் செய்திடுவாள் ! காதல் ஏந்தும்
மாயவளாய் மனக்காட்டைப் பற்றி ஆட்டி
. மயங்கத்தான் வைத்திடுவாள் அழகை யிங்கே
நீயெவ்வா றழைப்பாயோ அத்தோற் றத்தில்
. நிச்சயமாய்த் தோன்றியுனை இயக்கு வாளே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 4:16 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 203

மேலே