என்னங்க சார் உங்க சட்டம்
என்ன இது. என்ன நடக்கிறது இந்த ஜனநாயக நாட்டில். ஜனநாயக நாடு ?? நாம் இன்னும் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. போராட்டம், கடையடைப்பு எல்லாவற்றிக்கும் தடை என்ற கோர்ட்டு உத்தரவு ஒரு சாட்டையடி நம் முதுகில்.
இவ்வளவு நாள் உறங்கி கொண்டோ அல்லது அமைதியாய் நடப்பன பார்த்துக் கொண்டிருந்த விழிகள் எல்லாம் இப்பொழுது தான் ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிர் தியாகத்தில் தூக்கம் கலைத்து மெல்ல விழிப்பு கொண்டிருக்க்கின்றன. ஊமையான அனிதாவின் உதடுகள் இதுவரை பேசாமல் கிடந்த பல உதடுகளுக்கு உண்மையை உரிமையை பேசச் சொல்லித் தந்தன. விளைவு தமிழகத்தில் ஒரு உயிர் விட்டுச் சென்ற சிறு துளி தமிழ்நாட்டின் அத்தனை பக்கத்திலும் உணர்வலைகளை எழுப்பிப் பரப்பி விட்டது.
ஒருச் சிதையின் நெருப்புக்கனல் துண்டில் எழுந்த உரிமை குரல் எனும் தீ கொஞ்சம் கொஞ்சமாக எழும்பி தமிழகத்தின் அத்தனைப் பகுதிகளிலும் கேள்விகளாய் வேள்விகளாய் எழும்பாது தொடங்கியதும் பதில் சொல்ல வேண்டிய மாநில அரசும் மத்திய அரசும் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறது. ஒருவேளை நம் மதிப்பிற்குரிய பிரதமர் மோடி யோகா செய்து கொண்டிருக்க கூடும். நம் முதலமைச்சர்கள் முதலும் அவர் துணையும் அது தான் மதிப்பிற்குரிய பழனிச்சாமி அவர்களும் எடப்பாடி அவர்களும் அம்மாவின் புகைப்படம் முன் தியானம் செய்வார்களோ என்னவோ.
எழும்பிய தமிழகத்தின் உணர்வுகளை மதித்து பதில் சொல்ல வேண்டிய அரசாங்கம் உறங்கி கொண்டிருக்கிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை போராடும் மக்களைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறது. வர வர காவல் துறையினர் மேல் நம்பிக்கை குறைந்து வருகிறது. இன்றைக்கு காவல் துறை என்பது மக்களை காக்கும் காவல் துறையா அல்லது அதிகாரத்தின் ஆணவத்துக்கு துணை போகும் கூலிக்காரர்களா .... சே ஒரு போலீஸ் காரர் கூட மக்கோளோடு மக்களாக கலக்கக் கூடாதா, மக்களின் உரிமை குரலோடு சேர்ந்திட கூடாதா . காக்கி காவல் காத்திடக் கூடாதோ நீதியை ..
மக்களின் குரலுக்கு மக்களின் கேள்விகளுக்கு காரணமான இந்தக் கோர்ட் அதற்க்கு பதில் சொல்லவும் கடமை பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் பதில் சொல்ல வேண்டிய கோர்ட்டு சொல்லிய ஒற்றைப்பதில் என்னவோ கண்ணையும் வாயையும் மூடிக்கொள்ளுங்கள் என்பது தான். ஒரு குழந்தை கேள்வி கேட்டால் பதில் சொல்லி அவன் கேள்விகளைத் தெளிவுபடுத்தும் கடமையை கொண்ட ஆசிரியர் டேய் உக்காருடா எழும்பக்கூடாது, வாய மூடு கேள்வி கேக்காத ட, தலை குனிந்து புத்தகத்தை மட்டும் பார் என்று சொல்றது மாதிரி தான் இதுவும். குழந்தை மறுமுறை நிமிர்ந்தால் தலையில் கொட்டு ஓன்று வைத்து உக்காரு உக்காரு என்று சொல்லும் அழுத்தமான குரல் தான் இந்த உத்தரவு.
மாணவர்கள் எதிர்காலம் என்ற அக்கறை வந்திருந்தால் பள்ளி கல்வி நேரம் விடுத்து அதன் பின் உங்கள் குரல் இருக்கட்டும் என சொல்லியிருக்கலாம். மாணவ எதிர்காலம் கல்வி மேலான அக்கறை என நாம்நி னைத்துக் கொள்ளலாம் கடையடைப்பு கூடாதாம். ஒரு வணிகன் அவனது ஒரு நாள் லாபத்தை ஒறுத்து ஒரு நாள் நடத்தும் போராட்டத்தை கூடாது என்கிறார்கள். சாமானியன் போராடக்அ கூடாது என்றா. எந்த அரசியல் கட்சியம போராடக் கூடாதாம். அப்புறம் மக்களுக்காக யார் போராடுவது. கொடி தூக்கும் கை எல்லாம் உயரக் கூடாது எல்லோரும் கை கீழ் போட்டு கொஞ்சம் கையை கட்டி இன்னும் கொஞ்சம் வாயையும் போதிக்க கொள்ளச் சொல்லும் அதிகார குரல் இது. உரிமைக் கேட்டு யாரும் போராடக்கூடாது என்னும் சர்வாதிகார குரல் இது. ஹிட்லரின் சில பிம்பங்களை இனிக்க காணும் காலங்கள் நமக்கும் நெருங்குதோ என்ற சிறு அச்சம் பிறக்கிறது மனதுக்குள்.
சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதி நிலவ வேண்டும் என்கிறார்கள். மயானம் கூட அமைதி பூங்கா தான் . மனிதம் இல்லாத மயானம் வேண்டுமா. ஒருவேளை இன்று கண் கட்டிக்கொண்ட நீதி தேவதை அவள் போல நம் கண்களையையும் கட்டிகொள்ளச் சொல்கிறாளோ.. எல்லாரும் கண்ணை மூடிட்டு அவங்க அவங்க அவங்க வேலைய பாருங்க... இது தானே சொல்லுது இந்த கோர்ட்டு உத்தரவு..என்னங்க சார் உங்க சட்டம்..
சாமானியனின் உரிமைக் குரலோடு
யாழினி வளன்