பாரதியின் நினைவு நாள்

பாரதத்தில் பிறந்த தீ
பாரினிலே சிறந்த தீ
பாட்டினிலே பறந்த தீ
அவர்தான் பாரதி

டிசம்பர் 11 1982
அன்று
தங்கத்தின் மதிப்பு கூடியது
பொன்னால் அன்று
இவன் பிறந்த
பொன் நாள் அன்று

செப்டம்பர் 11 1921
அன்று
தமிழ் எரிந்துகொண்டிருந்தது
நெருப்பினால் அன்று
இவன் மறைந்த
கருப்பு நாள் அன்று

இவன்
பாரத விடுதலைக்குப்
போராடிய பா ரதம்

இவன் பா அழகிற்கு
ஈடில்லை ரதி
இதனாதான் இவன் பாரதி

அன்று
உலைவைக்கக் கூட
வழியில்லாதவனுக்கு
இன்று
வழியெங்கும்
சிலை வைக்கின்றது அரசு


கையில் வேல் கொண்டவனல்ல
கவியில் வாள் கொண்டவன்
பத்மாசூரனை அழிக்கப் பிறந்தவனல்ல
பரங்கியச்சூரனை அடக்கப் பிறந்தவன்

இன்னும்
பெண்ணடிமை கண்டு
வன்கோபம் கொண்டு
மண் அடியே எரிந்துகொண்டிருக்கின்றான்
புரட்சிக் கவி
அதன் தாக்கம்தான்
சூடானது புவி

முற்போக்கைக் காட்டிய தலைவா நீ
முண்டாசு கட்டிய கலைவாணி

அகத்தில் நெருப்புச்சட்டை
அங்கத்தில் கருப்புச்சட்டை
அணிந்தல்லவா வீசினான்
மூடர்மீது கவிதைச்சாட்டை

இவன்
விண்ணிலிருந்து வள்ளுவன் கைநழுவி
மண்ணில் விழுந்த எழுத்தாணி
பெண்ணடிமை செய்வோரின்
தலையில் இவன்
எழுத்தால் அடித்தான் ஆணி

இவன் சிலைமீது தாண்டிய
காக்கைகூட குயிலாய் மாறும்
சாரீர ஏற்றத்தாழ்வு கொண்டு
இவன் சிரம்மீது தீண்டிய
தென்றல்கூட புயலாக நேரும்
சமூக ஏற்றத்தாழ்வு கண்டு

அனைவருக்கும் தாய்ப்பால்
கொடுத்த தமிழ்த்தாய்
இவனுக்கு மட்டும்தான்
தமிழ்ப்பால் கொடுத்தாள்

சிவச்சாமியின் பார்வதி அல்ல
இவன்
சின்னச்சாமியின் பாரதி
இலசுமிக்குப் பிறந்த
இலட்சியக்கவி

இவன் நா
குயில் பாட்டு பாடிய
குயில்
இவன் பா
பாமரன் குளிர்காயும்
வெயில்

எமனே
எருமையால் முடியாதென்றா
எரிமலையை
யானைகொண்டு வீழ்த்தினாய் ?

மதம் இல்லை
என்று சொன்னதாலா இவனை
மதயானை சாய்த்தது

யானையே நீ சாய்த்தது
தமிழர்களின் ஏணியே

எட்டயபுரத்தில் பிறந்து
யாரும் எட்டாப்புகழ் பெற்றவனே
தமிழ் உலகின் கொற்றவனே

வாழ்த்துகிறேன் உன் புகழை
மகாகவியே வணங்குகிறேன்
உன் தமிழை ....

எழுதியவர் : குமார் (8-Sep-17, 10:54 pm)
பார்வை : 1332

மேலே