அப்பாவின் மின்விசிறி .....

வாழ்வியலின்
அனைத்துக் கோட்பாடுகளையும்
படித்துவிட்ட
அவருக்கு தந்தை என்னும்
பட்டத்தை பறித்துவிட்டு
பெருசு என்னும் புது பட்டம்
வழங்கப்பட்டிருந்தது .....

அக்கா, அண்ணன் ,தங்கை மற்றும் என்னை
பத்திரமாக குடும்பக்கடலில்
சேர்த்துவிட்டு
உடைந்துபோன துடுப்புகளோடு
வீட்டின் ஓரமாய்
ஒதுக்கப்பட்டிருந்தார் .....

சின்ன வாரிசுகளை
அழுகாமல் பார்த்துக் கொள்வதற்கும்
அவர்களின் ஒன்றிற்கும் இரண்டிற்கும்
இயற்பியலுக்கும் அப்பாற்ப்பட்டு
அவரது உடல் வலுக்கட்டாயமாக
ஒத்துக்கொள்ளவைக்கப்பட்டிருந்தது.......

ஆசையாய் வீடு கட்டி
குடும்பமாய் வாழவேண்டும்
ஆசைதான் அவருக்கு
கட்டினார் வீட்டை மட்டும்
வீடும் அவரை கட்டிகொண்டது போலும்
அனைவரும் வெளியே செல்லும் பொது
வீட்டோடு அவர் .....

பேருந்தில் ஓர இருக்கை,இலவச பஸ் பாஸ் ,
பென்சன் ,வங்கியின் சலுகையான வட்டி விகிதம் ,
இலவச டிவி இப்படி என
அரசு தரும் பல சலுகைகளில்
அவருக்கு முழுதாய் கிடைத்தது என்னவோ
அந்த சின்ன டிவி மட்டும்தான்........

மாதத்தின் முப்பது நாட்களிலும்
குடும்பம் என்னும் கோயிலில்
தென்படாத அவர்
பென்சன் வரும் இரண்டாம் தேதி மட்டும்
கண்ணுக்கு தெய்வமாய் தெரிவார் ....

பல விசேசங்களில் எட்டிக்கூட பார்க்காத
மரியாதை கல்யாண நாட்களிலும்
பிறந்த நாள் விழாக்களிலும்
ஆசீர்வாதத்தின் நிமித்தமாக
தவறாமல் கொடுக்கப்பட்டு வந்தது ....

ஆசாரத்தில் நன்றாக ஓடிகொண்டிருந்த
அப்பாவின் அந்தகால மின்விசிறி
திடீரென்று மெதுவாய் ஓட அவரைப்போலவே
பதவி உயர்வு பெற்று அவர் இருக்கும்
ஸ்டாரே ரூமிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டதில்
ஆச்சர்யம் எதுவுமில்லை ....

மாட்டிய இரண்டாவது நாள்
நின்றுபோனது அதுமட்டுமல்ல
அவரது இதயமும் சேர்ந்துதான்.

எழுதியவர் : இம்மானுவேல் (23-Jul-11, 7:28 pm)
சேர்த்தது : Immanuvel
பார்வை : 377

மேலே