உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு (சிறுகதை)

பூங்காவனம் என்ற ஒரு கிராமத்தில் முத்து, வேலன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவரும் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தனர். முத்து படு சுட்டி. எதையாவது முனைப்போடு செய்துகொண்டே இருக்க வேண்டும் என எண்ணுபவன். ஆனால் வேலன் அதற்கு நேர்மாறானவன். செல்வச்சீமானின் ஒரே மகன் என்பதால், அவனது பெற்றோர்கள் அவனிடம் மிகுந்த அன்புகொண்டு, செல்லம் கொடுத்து, அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தனர். இதனால் அவன் தலைக்கனம் கொண்டு, யாரையும் மதிக்காமல், பெற்றொர்களுக்கும் நாளடைவில் முக்கியத்துவம் தராமல், ஊதாரியாக விளங்கலானான்.

ஒரு நாள் தேர்வு சமயத்தில் வேலனுக்கு மிகுந்த காய்ச்சல் ஏற்பட்டு, அவனால் தேர்வு எழுத இயலாமல் போயிற்று. ஆனால் அதற்காக அவன் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறே அவன் விளங்கினான். பெற்றோர்கள் நாளடைவில் அவனது போக்கைக் கண்டடு மிகவும் வருத்தமடைந்தனர். தங்கள் குமாரனின் இத்தகைய நிலைக்குத் தாங்களே காரணமாக இருந்துவிட்டோமோ என்றும் அஞ்சினர். தன் ஒரேமகனின் எதிர்காலம் கவலைக்கிடமாக மாறிவிடக்கூடாதே என்று தினமும் இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற வகுப்புத் தேர்வுகளில் வேலன் மிகவும் குறைவான மதிப்பெண்களையே பெற்றிருந்தான். பொதுத்தேர்வும் நெருங்க ஆரம்பித்தது. அப்பொழுதுதான் வேலனுக்கு சிறிது கவலை தட்ட ஆரம்பித்தது. என்னசெய்வது, வகுப்பில் எப்பொழுதும் அனைவருடனும் சண்டையிட்டிருந்ததாலும், பாடம் கற்பிக்கும் ஆசிரயர்களிடமும் தரக்குறைவாக நடந்து கொண்டதாலும், அவன் எல்லோரிடமும் வெறுப்பையே சம்பாதித்து வைத்திருந்தான். இதானால் யாரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் தன்னுடன் பயிலும் முத்துவிற்கு அவன் பல வழிகளில் இடையூறு விளைவித்திருந்தான்.

இருப்பினும், முத்துவுக்கு அவன்மீது இனம்புரியாத பாசம் இருக்கத்தான் செய்தது. யார் வேலனை வெறுத்தாலும், முத்துமட்டும் அவனிடம் மாறாத பாசம் மிக்கவனாகவே இருந்து வந்தான். இதனால் அனைவராலும் கைவிடப்பட்ட வேலனுக்கு, அவனும் கல்வியில் உயரிய மதிப்பெண் பெற முத்து பல வகையிலும் உறுதுணை புரிந்தான்.

இதன் காரணமாகவே வேலனும் நாளடைவில் நன்கு பயில ஆரம்பித்துவிட்டான். அதோடு அவனிடம் வளர்ந்திருந்த தீய பழக்க வழக்கங்களையும் முத்து, சிறிது சிறிதாக மாற்ற முயற்சி செய்து, இறுதியில் வெற்றியும் கண்டான். வேலனின் பெற்றோர் இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததுடன், முத்துவுக்கு மிகவும் கடமைபட்டவர்களாகவும் விளங்கினர். ஊரெங்கும் இவர்களின் உயரிய நட்பு பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால் முத்து ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்தவன். இருப்பினும் அவன் பெற்றோர் தன் மகனை எப்படியாவது படிக்கவைக்க வேண்டும் என்று, எத்தனையோ இன்னல்களுக்கு நடுவிலும் மிகுந்த சிரமத்துடன் அவனை படிக்கவைத்தனர். அவனும் தன் பெற்றோர்களின் நம்பிக்கைக்கு மிகவும் தகுதி உடையவனாய் தன் படிப்பில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு செம்மையாக சிறந்து விளங்கினான். அவனுடைய கடின உழைப்பாலும், விடாமுயற்சியினாலும். ஊரார் மெச்சும்படி மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்.

இருந்தபோதிலும், அவனுடைய பெற்றோரால் அவனைத் தொடர்ந்து மேற்படிப்பு படிக்க வைக்க முடியவில்லை. அதற்காக முத்து சிறிதும் கவலைப்படாமல், தன் தந்தையிடம், “அப்பா! தாங்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம். நம் குடும்பம் இருக்கும் சூழலில் தாங்கள் என்னை இத்தனை தூரம் படிக்கவைத்ததே மேல்.எனவே, நான் படித்த கல்வியினால் தங்களுக்கும், அம்மாவிற்கும் எதாவது வகையில் உதவ முடிகிறதா? என்று பார்க்கிறேன்”. என்று கூறினான். அதைப்போலவே தன் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டான். விவசாயத்தில் பல புதிய மாற்றங்களையும், நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டான். இவனுடைய இந்த விடாமுயற்சி அவனை மிகப்பெரிய அளவில் இட்டுச்சென்றது. அதுவரை அந்த பூங்காவனம் கிராமத்தின் பெயர் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவன் விவசாயத்துறையில் சாதனை பல புரிந்து ‘கின்னஸ்’ புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டான். உலகமே பாரட்டக் கூடிய அளவிற்கு விவசாயத் துறையில் பல அரிய மாற்றங்களை மேற்கொண்டான். அவனால் வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகுந்த பெருமயும் புகழும் ஏற்பட்டது.

பெற்றோர்கள் தன் அன்பு மகனின் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும், பேர்புகழையும் கண்டு மிகவும் பூரித்துப்போனார்கள்.

இத்தகைய சூழலில் தான் ஒருநாள் முத்து தன் பால்ய நண்பன் வேலனை சந்தித்தான். அவன் அந்த மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றிருந்தான். முத்து ஆற்றிய சாதனைகள் பலவற்றிற்காக மிகப்பெரியதொரு பாராட்டு விழாவிற்குத் தலைமை தாங்கவே வேலன் வந்திருந்தான். விழாமேடையில் பரிசுப் பெறப்போகும் தன் பால்ய நண்பன் முத்துவைக் கண்டவுடன், தான் ஒரு மாவட்ட ஆட்சியாளர் என்பதையே மறந்து ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டான். முத்துவிற்கும், தன் சிறிய முயற்சியின் காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றிருக்கும் வேலனின் உயர்ச்சி மிகவும் பெருமையளித்தது. விழா நிறைவுற்றவுடன் நண்பர்கள் இருவரும் நீண்ட நேரம் அளவளாவினர். நண்பர்கள் இருவரின் முயற்சியால் பூங்காவனம் என்ற அந்த சிறிய கிராமம் மிகப்பெரியதொரு நகரமாக உருமாற்றம் பெற்று அதனால், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பினையும் நல்கி, சீரும் சிறப்புமாய் விளங்கியது.

இதைப்போல் ஒவ்வொருவரும் செயல்பட்டால் பூங்காவனம் கிராமம் என்ன? பூவுலகம் முழுவதும் புதுப்பொலிவோடு பூத்துக் குலுங்காதா? என்ன!

அன்புடன்
ஸ்ரீ. விஜயலக்‌ஷ்மி
கோயம்புத்துர் -22

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி (10-Sep-17, 9:09 pm)
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 272

மேலே