விருட்சங்களை விருத்தி செய்வோம்

விருட்சங்களை விருத்தி செய்வோம்.....!

ஆதாம் ஏவாளிற்கு அருங்கனியை ஈந்து
ஆறாம் அறிவை திறந்து வைத்தோம்
நோவாவின் பேழையாகி நசிவின்றி உயிர்கள் காத்தோம்
பாவிகளை இரட்சிக்க தேவமைந்தன் சிலுவையானோம்

கொலம்பஸ் வாஸ்கொடகாமா தோணி துடுப்பாகி
புத்தம்புது நீரிடைநிலங்கள் காணிட துருப்பானோம்
சக்கரமாய் சகடமாய் நாகரீக அச்சாணியாகி
சகவுறவாய் புவிசூழ வாணிகத்தின் கச்சமானோம்

காருண்ட நீரை மாமழையாய் பொழியவைத்தோம்
வேருண்ட நீரை மலர்காயுடன் கனியவைத்தோம்
ஏருடன் துலாவாய் ஊருக்கெல்லாம் உண்டியளித்தோம்
தேருடன் சப்பரமாய் திருவுருவங்களுக்கு அண்டையளித்தோம்

பழுதுகள் கழிந்திட கொழுந்தீக்கு உரமானோம்
விழுதுகளாய் வீழ்ந்தும் நம்பிக்கை வரமானோம்
நிழலுடன் சாமரமாய் நித்திரைக்கு சகிதமானோம்
உழவுடன் நெசவுமாய் இத்திரைக்கு சகலமானோம்

இயற்கைக்கு நேர்த்தியாய் இலையுதிர்வில் மொட்டையடிப்போம்
இறைமைக்கு நெய்வேத்தியமாய் வசந்தத்தில் மொட்டவிழ்ப்போம்
இல்லறயின்ப பள்ளியாய் ஈமச்சடங்கில் கொள்ளியாய்
இறப்பிற்கும் பிறப்பிற்கும் பிரபஞ்சத்தின் விருட்சமாவோம்

எச்சமாய் காகம் எண்திசையும் வனம் வளர்க்கும்
துச்சமாய் எண்ணாது விருட்சம் எமை விருத்தி செய்வீர்
மிச்சமாய் மீதியாய் எஞ்சுமிடம் விதைத்திடுவீர்
அச்சமின்றி அழிவின்றி அகிலத்தை உய்த்திடுவோம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (11-Sep-17, 7:48 pm)
பார்வை : 64

மேலே