தனி வீடும் அடுக்குமாடி குடியிருப்பும்
கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்த காலம்,
கேட்டுத் தெரிந்து கொள்ளும் சமயமிது.
வீதிக்கு வீதி வீடுகள் தனித்தனியாய் இருந்த போது,
வாழ்ந்தவர்கள் அரவணைப்பு ஆயிரம்.
தெரியாதவர் என்ற யாருமில்லை,
வசதிகள் அதிகமில்லை என்ற போதும்,
வரம்பு மீரா தொல்லையில்லை.
உறவுகள் உன்னதம் சொல்லாமலே புரிந்தது,
கள்ளம், கபடம் தெரியாமலே இருந்தது.
உண்மையின் உயர்வுகள் மனதில் நின்றன,
சொல் வாக்கும், செல்வாக்கும் மாறாமல் வளர்ந்தது.
இன்று........
அடுக்கு மாடி குடியிருப்பில்,
அருகருகே இருக்கும் போதும்,
அடுத்த வீட்டில் இருப்பது யார் என்று,
தெரிந்து கொள்வதில்லை.
காலுக்குக் கீழே தளமும் நமக்கில்லை,
கைக்கு மேலே கூறையும் நமதில்லை.
துவைத்த துணிகளைக் காயப் போட,
கால நேரம் பார்க்க வேண்டும்.
கதவுகளைச் சாத்தி வைத்து,
காதோரம் சத்தமில்லாமல் பேச வேண்டும்.
எட்டி நடக்க இடமில்லை,
எப்படிப் பார்த்தாலும் "வாஸ்து" மட்டும் சரியென்போம்.
குடியிருப்பில் ஒற்றுமை காக்க சங்கம் உண்டு,
சங்கமத்தில் சச்சரவு மட்டுமே மிஞ்சுவது உண்டு.
குருவிக்கும், காக்கைக்கும் வீடென்று,
தனிக் கூடு உண்டு.
தற்குறி மனிதன் மட்டும் தனி வீடு இன்று
பாதுகாப்பு இல்லை என்கிறான்.