இரவுச் சூரியன்

மகாகவி பாரதி நினைவுநாள் !!

இரவில் ஒரு சூரியன் இருளகற்றச் சேர்ந்தது !
பரவும் அதன் ஜோதியோ பாடலாக வாழுது !!

முண்டாசுக்குள் மூண்டெழும் எண்ணம்
எத்தனை யோசனை தூரம் ? - அதை
எவர்தான் சொல்லக் கூடும் ? - வெடி
குண்டாகும் அவன் பார்வைக்குள்ளே
எத்தனை தெய்வங்கள் வாழும் ? - அட
யாரறிவார் அதன் ஆழம் ?

கல்லிலும் கனலிலும் கடவுளைக் கண்டவன்
கடவுளாயினான் இன்று - அவன்
கவிதையாயினான் நன்று ! - பல
அல்லிலும் பகலிலும் எழுதிய கைகளும்
அமைதியாயின இங்கு - அவை
ஆதி பராபரை சங்கு !!

பாட்டுப் பாடவே பார்மிசை உதித்த
பகலவன் மூழ்கிய மாலை - விழிப்
பாற்கடல் மீதலை ஜ்வாலை ! - இந்த
நாட்டுக்காகவே நாளும் பேசிய
நாவுக்கு முடிந்தது வேளை - இனி
நமக்கென் றானதவ் வேலை !

-விவேக்பாரதி
11.09.2017

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:10 pm)
பார்வை : 60

மேலே