தோழா கரம் தா

கல்விநிலை மாற்றப் போராட்டம் வலுக்கப் பாடியது

மாணவரே வலுக்குதுபார் போராட்டம் - வெறும்
மணல்வந்தால் தடைப்படுமா நீரோட்டம் ?
காணவரும் நன்மைகளைப் பார்க்காதீர் - நம்
கடமையென்ன காணுங்கள் ! தோற்காதீர் !
ஆணைவரும் என்றெண்ணி அயராதீர் - அது
அவசரத்தைக் காட்டுங்கண்டு கலையாதீர் !
பாணம்வந்து தைத்திடிலும் நகராதீர் - நம்
படிப்பிற்காய் எழுந்தவரே குலையாதீர் !

நாட்டிற்கே அறிவுரையை அவள்சொல்லி - அங்கு
நல்லுலகம் சென்றுவிட்டாள் நமைத்தள்ளி !
ஏட்டிற்கே வழியில்லா வொருபெண்மை - சிதை
ஏறியதால் ! வீழ்ந்ததுநம் நலத்தன்மை !
காட்டிடுவோம் மாணவரின் பலமென்றே - நலக்
கல்விவந்து சேரும்வரை குறியொன்றே !
நீட்டுபவர் நீட்டிடட்டும் நமக்கென்ன ? - நம்
நிழல்கூடப் போராடும் ! பயமென்ன !!

கல்வியிலே வரவேண்டும் புதுமாற்றம் - சிறு
கயவர்கொண்டு வந்ததிந்தத் தடுமாற்றம் !
பல்விதத்தில் உயர்ந்தவர்நம் பாரதரே ! - இந்தப்
பக்குவத்தை உணராதோர் மூடர்களே !
சொல்வைத்தால் பெயர்க்காமல் நின்றிடுவோம் - அறச்
சோதனையால் தடையனைத்தும் வென்றிடுவோம் !
அல்லென்ன பகலென்ன நாமிணைந்தால் ? - பெறும்
அற்றலுண்டு கைகளே வா! கரம்தா !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:16 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 81

மேலே