என்னைப் பிரியாத சிவம்
என்னைப் பிரியாதிரு - சிவமே
என்னைப் பிரியாதிரு
நின்னைச் சிரமேற்றினேன் - சிவமே
நின்மேல் தவமேற்றினேன் !
அறிவோடும் மனத்தோடும் உறவாடிடு் - என்
ஆன்மாவின் வித்துக்குள் கருவாகிடு
நெறிகாட்டி உயர்வூட்டி நிலையாயிரு - நிதம்
நிஜமாகி எந்நெஞ்சில் கலையாதிரு ! (என்னைப்)
கதிதேடி அலைகின்ற கருமேகமாய் - உன்
கழல்தேடும் எனைத்தாங்கும் சுவராயிரு !
நதிபோலே செல்கின்ற என்வாழ்க்கையில் - கடல்
நலமாக நிலமாக நீசேர்ந்திடு ! (என்னைப்)
உயர்ஞானம் தவயோகம் மதிசேர்க்கிலேன் - சிறு
உடல்காக்கும் மருந்தாகும் நிலைகாண்கிலேன் !
அயர்வாகும் பொழுதெங்கும் எனைத்தாங்கியே - என்
அடிநெஞ்சில் உன்கோயில் சுடரேற்றிடு ! (என்னைப்)
அழிந்தோடும் நேரங்கள் இனிவேண்டிடேன் - என்
அவதாரப் பயனென்ன நீசொல்லிடு !
பழியோடும் புகழோடும் உழலாமலே - உன்
பதம்சேர்ந்து விதிதீர்த்து எனைப்புல்லிடு ! (என்னைப்)
-விவேக்பாரதி