மாஸ்கோவின் அந்நியன்

"A Stranger in Moscow" என்ற மைக்கெல் ஜாக்ஸனின் ஆங்கிலப் பாடல்...(மைக்கெல் ஜாக்ஸன் மரபில் இப்படித்தான் பாடுவார் !!!)

மழையோடு திரிகிறேன் தனியாகவே - என்
. மனமெங்கும் முகமூடி நிழலாடவே
இழையோடும் உணர்வென்னை மூடனென்று - மிக
. இயல்பாக சொல்லிடும் வழியாகவே !

வானத்து ஒளிமட்டும் மழையாகவே - எனை
. வந்துவந் தடிப்பது இயல்பாகவே
ஞானத்து வெய்யிலும் வரும்வேளைகள் - வெகு
. நாள்போல நகர்ந்திடும் நிலையாகவே !

ஊருக்குள் யாருமெனை மதிக்கவில்லை - எனை
. உச்சியில் விடவில்லை ! மிதிக்கவில்லை
காருக்குள் மழைமட்டும் பெய்துபெய்து - தன்
. கருணையைக் காட்டியெனை அணைக்கின்றதே !

எப்படி உணருவீர் தோழர்களே! - இதை
. எப்படிக் காணுவீர் நண்பர்களே !
எப்புறமும் உட்புறமும் குளிர்சூழவே - அட
. எப்போதும் தனிமையில் நீர்வாழவே !

புகழென்னை விட்டுதான் வெளியேறுமே - அது
. புரியாமல் நெஞ்சத்தில் போர்மூளுமே
புகல்கின்ற பேர்கூட எனைநீங்கவே - வெறும்
. புல்கூட நகைகொள்ளும் நிலையாகவே !

மகிழ்வான பொழுதாகும் இன்பமெல்லாம் - உடன்
. மிதந்தோடிச் செல்வதோ துன்பத்திலே
நகராமல் அசையாமல் மீண்டும்மீண்டும் - மழை
. நனைக்கின்ற படியென்னை அணைகின்றதே !

எப்படி உணருவீர் தோழர்களே! - இதை
. எப்படிக் காணுவீர் நண்பர்களே !
எப்புறமும் உட்புறமும் குளிர்சூழவே - அட
. எப்போதும் தனிமையில் நீர்வாழவே !

மாஸ்கோவின் தெருவிலே அந்நியன்நான் - இந்த
. மழையோடு பாடிடும் அன்றிலும்நாம் !
பாசத்துக் கேங்கிடும் தனியனும்நான் - ஒரு
. பாடகன் மாஸ்கோவில் அந்நியன்நான் !

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:28 pm)
பார்வை : 68

மேலே