பாரதி தரிசனம்
இன்று பாரதி தரிசனம் கண்டேன்.
அவனொரு புனிதன்
அவனொரு புதிரன்
அவனொரு பௌர்னமி - ஆம்
அவன் தான் பாரதி !
அவனொரு ஞானி
அவனொரு தேனி
அவனொரு சிந்து நதி - ஆம்
அவன் தான் பாரதி !
நன்றியின் சொல்முன்
நல்ல தருமத்தை
வணங்கும் அவனோர் அசரீரி !
கொன்றிட வந்திடும்
புலியில் அன்னையைக்
கண்டவன் ! அவனோர் அகவாசி !
முப்பரிமானச்
சொற்கள் ஏந்திடும்
பாரதி ! அவனோர் விஞ்ஞானி !
எப்பொழுதாகினும்
சக்தி நாமமே
ஏற்றிடும் அவனோர் மெஞ்ஞானி !
அவனொரு மனிதன்
அவனொரு அமரன் !
அவனொரு வாரிதி - ஆம்
அவன் தான் பாரதி
அவனொரு கவிஞன்
அவனொரு புலவன்
அவனொரு இசை ஜோதி - ஆம்
அவன் தான் பாரதி !
-விவேக்பாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
