நான் எந்த நூற்றாண்டு மனிதன்
நமது வீட்டின்
முகவரியை
யாரோ தீர்மானிக்கிறார்கள்....!
நான் யாருமற்றவன் ....!
இலக்கில்லாத பயணத்தில்
பேருந்து கிடைக்காமல்
அலைகிறேன்
எப்படியும் இன்று ஆபிஸிற்கு
தாமதமாகிவிடும் ....!
தினமும் ஆயிரம்
வண்ணங்களுடன்
என்னுடனான மனிதர்கள்
ஆயினும்
எனது சிகரெட்
புகையின் நிறம்
வெண்மைதான்..
வெதுவெதுப்பான
மதியநேரக்காற்றில்
காமத்தை தேடி
வெறிபிடித்து அலைகின்றன
சில கொம்பு முளைத்த நாய்கள்.
எச்சில் ஒழுக
என்னை பார்த்து இரைகின்றன....
இது கலாச்சார வீதிதான்
ஆனாலும் எங்கும் நாற்றம்...
உலகத்தின் பிரமாண்ட
ஆச்சர்யமாக
ஒரு காலையில்
வானிலிருந்து வந்திறங்கும்
வெள்ளைத்தேவதைகள் ....
ஒருநாள் மட்டும்
அவர்களது வெள்ளைக்குதிரைகள்
பூட்டிய வண்டியில்
ஆபீஸ் செல்கிறேன்.....!
எனது வெறுமையான
காத்திருப்புகளின் முடிவில்
பேருந்து இன்னும் வரவில்லை....!
நான் சொல்வது படிமங்கள்
நிறைந்த கதை
கவிதை அல்ல...!
இது கவிதைதான்
கவிஞனுக்கு மட்டும்.
நான் கவிஞனுமல்ல..
மனிதன்.