மனிதர்கள்

என் அலுவலக அறையின் ஜன்னல் கம்பிகள் வழியே அஸ்தமித்துக் கொண்டிருக்கும் இந்த நாளின் மிச்சப்பொழுதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .இன்று நிச்சயம் மழை பெய்யும் .
திட்டுத் திட்டாய் கருமேகங்கள் வானத்தில் இருந்து கிடக்கின்றன .தூரத்திலிருந்து மின்னல் வெளிச்சம் பளிச் பளிச்சென்று அடிக்கடி அடிக்கிறது .இந்த ரம்ய மான சூழலுக்கிடையில் நான் ஒரு நிமிடம் என்னை மறந்து போனேன்.
ஆனாலும் இன்று நடந்த அந்தச் சம்பவம் என்னை அடிக்கடி கிள்ளி தொந்தரவு செய்தது .எனது மெல்லிய மாலை பொழுதை மௌனமாய்க் கடித்துத் தின்றது .
கீழே சாலையைப் பார்த்தேன் .மனிதர்கள் ,எங்கும் மனிதர்கள்.அவசர அவசரமாய் கார்களிலும் ,பைக்கிலும் ,நடந்தும் நான் வேலை செய்கின்ற மருத்துவமனையை விட்டு உள்ளும் வெளியும் செல்லும் மனிதர்கள் .
சிலர் நோயுற்ற உறவினர்களைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு சென்றுக் கொண்டிருந்தார்கள்.சிலர் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் .
இதோ மழை சன்னமாக பொழியஆரம்பித்து விட்டது .நானும் சன்னலை அடைத்து விட்டு என் இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டேன் .மனம் அன்று காலை நடந்த சம்பவத்தை அசை போட்டது .
அன்று காலை 10 மணியளவில் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் இருந்து அழைப்பு வந்தது ."என்ன எமெர்ஜென்சி கேஸோ என்று நினைத்து ,என் நடையை அவசர படுத்தினேன் .மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு ஓட்டமும் நடையுமாய் சென்றடைந்தேன் .
அவசரப் பிரிவுக்குள் நுழைந்ததும் முதலில் அவளைத்தான் பார்த்தேன் .அந்தப் பெண்ணுக்கு 40 வயது தான் இருக்கும் .மாநிறம் .சற்றே பருத்த உடல் .நெற்றியை பாதி மறைத்துக்க்கொண்டு குங்குமப்பொட்டு .முகத்தில் பதட்டம் .கண்களின் ஒரத்தில் எந்த நாழியும் கொட்டிவிடத்துடிக்கும் கண்ணீர் .
என் கைகளில் சிவப்பு நிற பைலை திணித்து விட்டு " பத்தாம் நம்பர் பெட் "என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் டியூட்டியில் இருந்த நர்ஸ் .ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டு பத்தாம் நம்பர் பெட் நோக்கி நகர்ந்தேன் .கூடவே அந்தப் பெண்ணும்
நடந்தாள்.
பத்தாம் நம்பர் பெட் ஐ பார்த்ததும் ,அதில் படுத்து இருந்தது அந்தப் பெண்ணின் கணவராகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்டேன் .அந்த மனிதன் நெஞ்சு வலி யால் துடித்துக் கொண்டிருந்தான் .உடல் முழுவதுமாய் பிசாரியாரிஸ் என்ற தோல்நோய் பீடித்து இருந்தது .அவன் தோல் துகள் துகலாய் ,செதில் செதிலாய் .....பார்க்கவே கஷ்டமாக இருந்தது .
அவசரமாய்த் திரையை மூடினேன் .பரிசோதித்து முடித்ததும் விளங்கிற்று .மாரடைப்பு.
கொடுக்க வேண்டிய அவசர சிகிச்சையை கொடுத்து விட்டு,மற்ற விபரங்கை பைலில் எழுதிய பின் உடனடியாய் அந்த மனிதனை ICU விற்கு மாற்ற வேண்டிய ஏற்பாடுகளை செய்தேன்.
இன்னும் ஒரு வேலை பாக்கி இருந்தது .அந்தப் பெண்ணிடம் அவள் கணவனின் உண்மை நிலையை விளக்க வேண்டும், என் அனுதின வேலையில் எனக்குப் பிடிக்காத பகுதி இது தான்.உறவினர்களிடம் அவர்களின் அன்புக்குரியவர்களின் ,நோயை பற்றி சொல்லுவது கடினம் என்றால்...உயிருக்கு போராடும் நோயாளிகளின் நிலைமையை விளக்குவது அதைவிட
கடினம் .உறவினர்களின் முகத்தில் இருக்கின்ற சோகம்,எதிர்பார்ப்பு இது எல்லாம் சேர்ந்து என் மனதை உலுக்கி விடும் .சில நேரங்களில் இறந்து விட்டார் என்று சொல்லும் முன்னமே என் தொண்டை கட்டிக் கொள்ளும்.
இன்று இது மாதிரியெல்லாம் இருக்கக் கூடாது .ரொம்ப நிதானமாய் இருக்க வேண்டும் என்று எனக்குள்ளேயே நான் பேசிக் கொள்கிறேன்.
emergency வார்டின் வெளிப்புற சுவற்றின் மீது சாய்ந்துக் கொண் டிருந்த அந்த பெண்ணை நோக்கி சென்றேன். என்னை பார்த்ததும் தன்னை சரி படுத்தி நின்றாள்.நான் அருகில் சென்றதும் என்னை பார்த்து 'டாக்டர் ' என்றாள்."உனக்கு எத்தனை பிள்ளைகள் அம்மா ?"என்று வினவினேன்.
"ஒரு பையன் ,வேலை செய்யிறான் "என்றவள் சட்டென்று என் கைகளை இறுக்க பற்றிக்கொண்டாள்."டாக்டர் எப்படியாவது அந்த மனுஷன் கிட்டே இருந்து ஒரு கையெழுத்து மட்டும் வாங்கி குடுத்திருங்க என்றாள்.
ஒரு நிமிடம் எனக்குள் அதிர்ச்சி .ஒன்றும் புரிய வில்லை .திகைத்து நின்றேன் .

அவள் தொடர்ந்து பேசினாள்."ஆமாங்கய்யா ,என் வீட்டுக்காரர் பேரிலே ஒரு நிலம் இருக்கு .இந்த மனுஷன் போய் சேந்துட்டாருன்னா ..அவங்க அம்மா அப்பா அந்த நிலத்தை அமுக்கிருவாங்க .அதனாலே அவங்க வீடு ஆளுங்க வர்றதுக்கு முன்னாடியே ,அந்த கையெழுத்தை மட்டும் வாங்கி குடுத்திட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமாய் போகும் "என்று சொல்லி தன் முந்தானையில் மூக்கு சிந்தினாள்.
என் நெற்றி சுரீர் என்று வலித்தது.எதுவும் பேச தோன்ற வில்லை .நேராக என் அலுவலக அறைக்கு மீண்டும் வந்து விட்டேன்.
......................
வெளியில் மழை ஓய்ந்து இருந்தது குருவிகள் விட்ட இடத்தில இருந்து தங்கள் வேட்டையை தொடர்ந்து விட்டன.என் மனதில் சூன்யம். காட்சிகளில் என்னால் கலக்க முடிய வில்லை .

"சே ..இவ்வளவுதானா இந்த மனிதர்கள்"??

எழுதியவர் : புஷ்ப மேரி (18-Sep-17, 9:15 pm)
சேர்த்தது : pushpamary
Tanglish : manithargal
பார்வை : 261

மேலே