கவிதையின் காலடியில்ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம்.
என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். இந்த அவையில் அவரை வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
ராஜமார்த்தண்டன் கவிதைகள், பிற திறனாய்வுகள் எழுதியிருந்தபோதிலும் அவரை அடிப்படையில் ஒரு கவிதைவரலாற்றாசிரியராகவும் கவிதைத்திறனாய்வாளராகவுமே நான் மதிப்பிடுகிறேன். அவரது ‘தமிழ் புதுக்கவிதை வரலாறு’ ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ ஆகியவை முக்கியமான நூல்கள். ராஜமார்த்தாண்டனை கோட்பாடற்ற திறனாய்வாளர் என்று சொல்லலாம்.
வளரும் குழந்தைக்குச் சட்டை தைப்பது போன்றது இலக்கியப்படைப்புகளை கோட்பாடு சார்ந்து அணுகுவது. துல்லியமாக அளர்ந்து நேர்த்தியாக நாம் சட்டை தைக்கலாம். தைக்கும்போதே குழந்தை வளர்ந்து உருமாறிக் கொண்டிருக்கிறது. குழந்தை என்பதே ஒரு தொடர்நிகழ்வுதான். உண்மையில் குழந்தைமைதான் உள்ளது, குழந்தை என நாம் அதைத்தான் சொல்கிறோம். சட்டைகளை குழந்தைகள் ஒவ்வொருகணமும் மீறிச்செல்கின்றன. ஆகவேதான் கவிதைகள் பற்றிய பலநூறு கோட்பாடுகளை நாம் இப்போது காண்கிறோம். கவிதையை விளக்க அவை போதவில்லை என புதிய கோட்பாடுகளை தேடிச் செல்கிறோம்.
இலக்கியத்தின் மீது போடப்படும் கோட்பாடுகள் பலவகை. அரசியல் கருத்தியல்கள் சார்ந்து இலக்கியத்துக்கு உருவாக்கப்படும் கோட்பாடுகள் உண்டு.சமூகவியல், உளவியல், மொழியியல் போன்ற பிற அறிவுத்துறைகளின் கோட்பாடுகள் இலக்கியத்தின்மீது செயல்படுத்தப்படுவதுண்டு. பெரும்பாலான கோட்பாடுகள் இலக்கியத்தை இலக்கியமல்லாத அறிவுத்துறைகளுடன் உரையாடவைக்க முயல்கின்றன.
இக்கோட்பாடுகள் இலக்கியத்தை இறுக்குகின்றன, குறுக்குகின்றன என்ற எண்ணம் இலக்கியவாதிகளிடம் எப்போதுமே உண்டு. நம்முடைய படைப்பொன்று கோட்பாட்டு விமரிசனத்துக்கு ஆளாகும்போது எப்போதுமே நாம் துணுக்குறுகிறோம். பறந்து கொண்டிருப்பது ஊர்ந்துசெல்ல ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். ஆகவேதான் இலக்கியத்தை இலக்கியத்திற்குள் வைத்து மதிப்பிடும் அழகியல் விமரிசன முறைமைகள் உருவாயின. தொன்மையான இலக்கண விமரிசனமுறை ஒன்று எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது. இன்றைய அழகியல் திறனாய்வுமுறை பிரிட்டிஷ் இலக்கிய விமரிசனத்தில் இருந்து உருவானது. அதை உருவாக்கியவர்கள் கூல்ரிட்ஜ், ஜான்ஸன் போன்ற இலக்கியவாதிகள்.
அழகியல் விமரிசனம் என்பது பெரிதும் அகவயமானது. இலக்கியம்போன்ற ஒரு படைப்புச் செயல்பாடு அது. மொழிவெளிப்பாட்டின் நுட்பத்தாலேயே நிலைநிற்பது. அதற்கு எதிரான புறவய அணுகுமுறை எப்போதும் இலக்கியத்தளத்தில் உண்டு. முன்னர் தத்துவம் சார்ந்து புறவய அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் மொழியியல் சார்ந்து. ஆனால் எப்போதுமே அது இலக்கியத்தின் அடிப்படைகளைச் சார்ந்து அழகியல் விமரிசனமுறை வலுவாக இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அது வாசகனின் ரசனையை விமரிசகனின் ரசனை சந்திக்கும் ஒரு புள்ளியில் இயங்குகிறது.
இலக்கியத்தை இலக்கியத்திற்குள் வைத்து அணுகும் போக்கிலும் கோட்பாட்டு அணுகுமுறை உருவாகிறது. அதை அழகியல் கோட்பாடுகள் எனலாம். அழகியல் கருதுகோள்கள் இலக்கியத்தில் இயல்பாக உருவாகின்றன. அவற்றை ஒரு நிலையான அளவுகோலாகக் கொள்ளும்போது, அவற்றை வைத்து அனைத்தையும் புறவயமாக மதிப்பிட ஆரம்பிக்கும்போது அவை கோட்பாடுகளாக ஆகிவிடுகின்றன. இது நவீனத்துவம், இது பின் நவீனத்துவம், இது செவ்வியல், இது மீமெய்யியல் என்றெல்லாம் வகுத்து ஆராய முற்படும் விமரிசகன் அவற்றை கோட்பாடுகளாக ஆக்குகிறான். அந்த கோட்பாட்டு அளவுகோல்களுக்கு அப்பால்தான் இலக்கியப் படைப்பின் பெரும்பகுதி விரிந்துகிடக்கும். அவற்றை வெறும் அறிதல்முறைகளாக, கருவிகளாக காண்பவனே அழகியல் விமரிசகனாக முடியும்.
இந்த இருவகைக்கும் இருவரை உதாரணங்களாகச் சொல்ல முடியும். சி.சு.செல்லப்பா அழகியல் விமரிசனத்தை அழகியல்கோட்பாட்டு விமரிசனமாக மாற்றிக் கொண்டவர். அவருக்கு படைப்பை புரிந்துகொள்வதை விட வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் அதிகமிருந்தது. பொதுக்கூறுகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கொண்டு படைப்புகளை இன்னவகை என்று அடையாளப்படுத்தவே அவர் அலசல் விமரிசனத்தை கையாண்டார்.
மாறாக க.நா.சு இலக்கிய விமரிசனத்தை தன் ரசனையின் தளத்தில் மட்டுமே நிறுத்திக் கொண்டவர். அவருக்கும் இலக்கியக் கருதுகோள்களில் ஆர்வம் உண்டு. இந்தப்படைப்பில் ஒரு சர்-ரியலிசத்தன்மை உண்டு என்று சொல்வார், இது ஒரு சர்-ரியலிச படைப்பு என்று சொல்லமாட்டார். தன் ரசனையின் முடிவுகளை மட்டுமே முன்னிறுத்துவார். க.நா.சுவின் வழிவந்தவர் என்று சுந்தர ராமசாமியைச் சொல்லலாம். ராஜமார்த்தாண்டன் அந்த மரபை முழுமையாகச் சார்ந்தவர். சுந்தர ராமசாமி தன் தேர்வுக்கான காரணங்களை விளக்க முயன்றார். ஆனால் அவருக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. தத்துவம் போன்ற பிற துறைகளில் விரிவான அறிமுகமும் இல்லை. ஆகவே அவை தன் மொழியின் நுண்ணிய சாத்தியங்களைக் கொண்டு தன் அகவய இயக்கத்தை விளக்க முயலும் யத்தனங்களாகவே நின்று விட்டன.
மாறாக ராஜமார்த்தாண்டன் தெளிவாக தன் ரசனையின் தேர்வுகளை மட்டுமே முன்வைக்கிறார் என்பதைக் காணலாம். அதற்கான காரண காரியங்களை விளக்க அவர் முனைவதில்லை. தன் தேர்வுகளை தீர்ப்புகளாக்க முனைவதில்லை. ஆகவே முழுக்க முழுக்க கோட்பாடற்ற ஒரு இடத்தில் நின்று அவர் தன் இலக்கிய விமரிசனத்தைச் செய்கிறார்.
ஒருவகையில் இது வெறும் பட்டியல், அல்லது ரசனைக்குறிப்பு, இலக்கிய விமரிசனம் அல்ல என்று சொல்லலாம். ஆனால் தமிழ் விமரிசகர்களில் நல்ல படைப்புகளை இனம்கண்டுகொண்டு முன்னிறுத்துவது, நல்ல படைப்புகளின் ஆத்மாவை வாசகனுக்கு உணர்த்துவது இரண்டிலும் க.நா.சுவுக்கு இணையாக எவருமே இல்லை என்பதையே இன்றைய வரலாறு காட்டுகிறது. அழகியல் விமரிசகரான சி.சு.செல்லப்பா ரசனை ரீதியாக பிழைகள் மலிந்தவராகவே தென்படுகிறார். அதேசமயம் நம் கோட்பாட்டு விமரிசகர்கள் முற்றிலும் ரசனைகெட்டவர்களாக, கனியிருப்ப தவறாமல் காய் கவர்பவர்களாக, இலக்கிய நிராகரிப்பாளர்களாக, ஏதாவது ஒரு புதிய கோட்பாட்டுக் கருவியை கண்டெடுத்து இலக்கியவாதிகளை சிறுமைப்படுத்துபவர்களாக மட்டுமே காணக்கிடைக்கிறார்கள். ரசனை விமரிசனம் மீது ஆழமான நம்பிக்கை¨யை நம்மில் உண்டுபண்ணுபவர்கள் இவர்களே.
சுந்தர ராமசாமி முன்பு ஒருமுறை நம் மரபில் இலக்கியவிமரிசனம் இல்லை என்று எழுதியிருந்தார். அதைப்பற்றி நான் அவரிடம் உரையாடியிருக்கிறேன். நம் மரபில் தொகுப்புமுறை உள்ளது. உரை மரபு உள்ளது. இரண்டும் நமக்குரிய விமரிசன முறைகளே. மேலைச்சிந்தனையிலும் இன்றைய இலக்கிய விமரிசனமுறை மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் உருவானதே. சொல்லப்போனால் பொருளியலாளர்களான ஜெ.எஸ்.மில் போன்றவர்கள் பொருளியல் கட்டுரைகளின் அறிவியல்தர்க்க முறை சார்ந்த உரைநடையில் இலக்கியத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் இன்றைய விமரிசன முறை உருவாகி வந்தது.
ஒரு ஒட்டுமொத்த மரபில் இருந்து நாநூறு பாட்டுகளை தேர்வுசெய்து அகநாநூறு என்றோ நற்றிணை என்றோ தொகுப்பவர்களின் பிரக்ஞையில் தெளிவான ரசனையும் அளவுகோலும் உள்ளது. அதை அவர்கள் பதிவுசெய்யாமலிருந்தாலும் இன்றும் நாம் அதை அந்நூல்கள் வழியாகவே தெளிவாகக் காணலாம். இன்று ராஜமார்த்தண்டன் செய்வதும் அத்தகைய ஒரு மறைமுக விமரிசனச் செயல்பாட்டையே. ஒருவர் தொடர்ச்சியாக தன் தேர்வுகளை மட்டும் முன்வைத்துவந்தால் ஒரு கட்டத்தில் அது திட்டவட்டமான ஒரு விமரிசன நிலைபாடாக மாறி விடுகிறது. துல்லியமான ரசனையை வெளிக்காட்டுவதாக அமைகிறது. அதன் பின்னால் உள்ள ஆளுமையைக் காட்டுகிறது.
அந்த ரசனையை அவர் விளக்க ஆரம்பித்தால் கோட்பாடுகளை நோக்கிச் செல்லக்கூடும். ஒரு கவிதையை அவர் ரசிப்பதை நியாயப்படுத்தினால் அதற்கு நேர்மாறான ஒரு கவிதையை அவர் ரசிக்கமுடியாமல் ஆகக்கூடும். அவரது சொந்த விளக்கங்களே அவரை கட்டுப்படுத்தக் கூடும். கையறுநிலையிலும் இயற்கை வருணனையை நிரப்பி வைக்கும் புறநாநூறு பாடல்களை தொகுத்த அதே மனம்தான் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ போன்ற ஒரு எளிமையான பாடலையும் உள்ளே சேர்த்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய தன்னிச்சையான தேர்வு சாத்தியமில்லாமல் ஆகக்கூடும்.
யோசித்துப்பாருங்கள் , அன்றைய தொகுப்பாளர் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அக்கவிதைகளைத் தொகுத்திருந்தால் அந்தக் காலமே வரலாற்றிலும் இல்லாமல் ஆகிவிட்ட இன்று அந்தக் கவிதைகள் எப்படி பொருள்பட்டிருக்கும்? ஒரு தலைமுறைக்குமேல் நீளும் இலக்கியக் கோட்பாடு என ஏதுமில்லை. இன்றைய சூழலில் பத்துவருடம்கூட கோட்பாடுகள் நீடிப்பதில்லை. ஆனால் இலக்கியப்படைப்புகள் சாதாரணமாக பல தலைமுறைகளைத் தாண்டிச் செல்லக்கூடியவை. பத்துவருடம் முன்பு இங்கே அமைப்புவாத கோட்பாடுகள், பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை குத்துமதிப்பாக புரிந்துகொண்டவர்கள் அவையே சிந்தனையின் கடைசிப்படி என்று உற்சாகக்குரல் எழுப்பினார்கள். இன்று அவை பழங்கதைகளாக ஆகிவிட்டிருக்கின்றன. புதிய கோட்பாடுகள் பேசப்படுகின்றன. அன்று அந்தக் கோட்பாடுகளைக் கொண்டு ஒரு இலக்கியத்தெரிவு மேற்கொண்டிருந்தால் இன்று என்ன பொருள் அவற்றுக்கு?
கோட்பாட்டு விமரிசனத்தை நான் நிராகரிக்கவில்லை. அதன் எல்லைகளைப் பற்றி மட்டுமே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு விமரிசனம் இலக்கியத்தின் ஒரு பகுதியை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது, கவனப்படுத்துகிறது. இலக்கியம் அதுமட்டுமல்ல என்ற போதத்துடன் அதை ஒருவர் கையாள்வார் என்றால் அது பயனுள்ள கருவியே ஆகும். ஆனால் இலக்கியம் ஆராய்ச்சிக்கு உரியதல்ல, ரசனைக்குரியது. ரசனை சார்ந்த அணுகுமுறையே இயல்பானதும் என்றுமுள்ளதுமாகும்.
ராஜமார்த்தாண்டன் தன்னை ஒரு வாசகனாக படைப்பின் முன் நிறுத்துகிறார். தன்னில் அவை உருவாக்கும் விளைவை கவனிக்கிறார். அதன் அடிப்படையில் தன் முடிவுகளை முன்வைக்கிறார். அவரது கொங்குத்தேர் வாழ்க்கை தொகுப்பில் பிரம்மராஜன், யவனிகாஸ்ரீராம் போன்ற சிலரை அவர் தவிர்த்து விட்டாரென்றும், அதைப்பற்றிக் கேட்டபோது அவர்கள் தன்னை கவரவில்லை என்று சொன்னாரென்றும் ந.முருகேசபாண்டியன் சொன்னார். இந்தபெயர்கள் இக்காலகட்டத்தை சார்ந்தவையாதலால் நமக்கு பெரிதாகத் தோன்றுகின்றன. இந்த ஆட்களை நாம் அறிவோம் என்பதனால். எழுபதுகளில் கனகதாரா என்பவர் எல்லா சிற்றிதழ்களிலும் எழுதித்தள்ளினார். அவரது கவிதைகளை ராஜமார்த்தண்டன் சேர்க்கவில்லை. அப்படி அவர் விட்டுவிட்ட ஐம்பது பேரை நான் சொல்லமுடியும்.
இப்படி விடப்பட்டவர்களின் கவிதைகளை மட்டும் கவனித்தால் அவற்றை ராஜமார்த்தண்டன் ஏன் விட்டுவிட்டார் என்பது தெளிவாகவே இருக்கிற்து. அவை பாசாங்கானவை. செயற்கையானவை. அரசியல் சார்ந்த பாசாங்குகள், மேடை சார்ந்த பாசாங்குகள் நம் கண்ணுக்கு உடனே தெரிகின்றன. அவற்றை ராஜமார்த்தண்டன் தவிர்க்கும்போது நாமும் ஒப்புக் கொள்கிறோம். சிற்றிதழ் சார்ந்த பாசாங்குகள் பல உண்டு. கலகக்காரன் என்ற பாசாங்கு. ‘சூப்பர்’ அறிவுஜீவி என்ற பாசாங்கு. பெண்ணியவாதி என்ற பாசாங்கு. தலித் புரட்சியாளன் என்றர பாசாங்கு. அவை நடுத்தர வற்கத்து எளிய மனிதர்களின் இயலாமையின் விளைவுகள் மட்டுமே. ஒரு புது கோட்பாடு இறக்குமதியாகும்போது உடனே அதற்கேற்ற பாசாங்குகளும் பிறக்கின்றன.நாற்பதுவருடங்களாக மிகமிக நுணுக்கமாக — ஒரு கலைக்களஞ்சியம் என்றே சொல்லிவிடக்கூடிய அளவுக்கு — தமிழ் கவிதையை கவனித்துவரும் ராஜமார்த்தண்டன் இதற்குள் எத்தனை பாசாங்குகள் வந்துசென்றதை பார்த்திருப்பார்? ஆகவே ஈவிரக்கமில்லாமல் ராஜமார்த்தண்டன் அவற்றை கழித்து விடுகிறார்.
மூளையை இலக்கியம் நோக்கி திருப்புவது ஒருவகை வாசிப்பு. கோட்பாட்டு விமரிசகர்கள் செய்வது அதையே. தமிழில் அம்மூளைகள் திறனற்றவை என்பதனால் அதன் பரிதாபகரமான விளைவுகளை நாம் கண்கூடாகக் காணவும் செய்கிறோம். ஆழ்மனதை படைப்புகளை நோக்கி திருப்புவதென்பது ராஜமார்த்தாண்டன் முன்வைக்கும் வாசிப்பு. அவரது இலக்கியச் செயல்பாடு என்பது இதுவே. தன்னை முழுமையாக, முன் நிபந்தனைகள் இல்லாமல், நிர்வாணமாக படைப்பு முன் நிறுத்துவது. அப்போது ஒன்று நிகழ்கிறது, எந்த ஆழ்மன எழுச்சி இலக்கியப்படைப்பை உருவாக்கியதோ அதே ஆழ்மன எழுச்சி வாசக தளத்திலும் நிகழ்கிறது. எந்நிலையிலும் முற்றிலும் புரிந்து வகுத்துவிட முடியாத பண்பாட்டு ஆழத்தில் படைப்பும் வாசகனும் உரையாடுகிறார்கள்.
ஆகவே ஒரு படைப்பு ஏன் தன்னைக் கவர்கிறது என்று ராஜமார்த்தண்டன் போன்றவர்களால் சொல்லிவிடமுடியாது. சொல்ல ஆரம்பிக்கும்போதே அது தவறாகவும் போதாமலும் ஆவதைத்தான் அவர்கள் உணர்கிறார்கள். புறவயமாகச் சொல்லத்தக்கதாக ராஜமார்த்தண்டன் உணர்வது அப்படைப்பு எழுதப்பட்ட சூழல், அதன் இலக்கிய வரலாற்று மரபு இரண்டைப்பற்றி மட்டுமே. அவர் அவற்றைப்பற்றி மட்டுமே விரிவாகப்பேசி அந்த தருணத்தில் தன் முடிவை முன்வைத்து நிறுத்திக் கொள்கிறார். தன் காலகட்டத்தின் வாசகப்பொதுமனத்தின் துல்லியமான பிரதிநிதியாக ஆவதே அவரது இலக்காக இருக்கிறது. அவர் வழியாக இக்காலகட்டத்தின் வாசக ஆழ்மனம் வெளிப்படுவதனாலேயே அவர் முக்கியமானவராக ஆகிறார்.
சமணத்துறவிகள் பிட்சை ஏற்கும்போது உணவை எந்த வித பாத்திரத்திலும் வாங்க மாட்டார்கள். இலையில்கூட பெற மாட்டார்கள்.வெறும் கையில் வாங்கி நேரடியாக உண்பார்கள். கவிதையை வெறும் இதயத்தால் வாங்கக்கூடிய விமரிசகராக நிற்கிறார் ராஜமார்த்தாண்டன்.
[நாகர்கோயிலில் நிகழ்ந்த ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபதுஇலக்கியக் கூட்டத்தில்’ஆற்றிய உரை]