அழிவின்றிக் காப்போம்
![](https://eluthu.com/images/loading.gif)
அலங்காரச் சிலையெனவே
***அழகுமிளிர் மங்கையரின்
பலவண்ண அசைவுகளில்
***பாதங்கள் பதிந்தாட
சலங்கையொலி கொஞ்சலுடன்
***தரைமீது தாளமிட
மலர்க்கூந்தல் சேர்ந்தாடும்
***வளைந்தாடும் மெல்லிடைமேல் !
விழிபேசும் பாவனையும்
***விரல்காட்டும் முத்திரையும்
மொழியின்றி உணரவைக்கும்
***முகத்தினிலே நவரசமும்
எழிலாகப் பூத்திருக்கும்
***இதயத்தை இதமாக்கும்
அழிவின்றிக் காத்திடுவோம்
***அருங்கலையாம் பரதத்தை !
சியாமளா ராஜசேகர்