இசையே

இசையே அமிழ்தம் ! இசையே சொர்க்கம் !
இசையே இன்பத்தின் சாரம் !
இசையே போதம் ! இசையே போதை !
இசையே எண்ணத்தின் வீச்சு !
இசையே அழகு ! இசையே தெய்வம் !
இசையே மனங்களின் பாவம் !
இசையல் லாதோர் இனிமை கேட்கின்
இயலா தென்போமே நாளும் !

புள்ளிடும் இசையில் புளகம் பிறக்கும் !
புயலிசை புயவலி கூட்டும் !
துள்ள வைக்கின்ற நாட்டிசை நம்மைத்
துன்பத்தை விட்டுயர்வு காட்டும் !
உள்ளம் இழுக்கும் இசையே வேதம்
உலகில் சமசரச மார்க்கம் !
அள்ளக் குறையா மதுவின் கோப்பை
அழியா உயர்நிலை ஞானம் !

காதலும் இசையே கலவியும் இசையே
கருவுறல் மகப்பே(று) இசையே
மோதலும் இசையே மோட்சத்தை வேண்டும்
மோனமும் பிறிதொரு இசையே !
யாதுமெம் அன்னை கலைமகள் செய்யும்
யவ்வணக் கோலங்கள் என்றே
ஓதுவம் ஓதுவம் இசைவெள் ளத்தில்
ஓடுவம் கூடுவம் வாரீர் !!

-விவேக்பாரதி
25.09.2017

எழுதியவர் : விவேக்பாரதி (29-Sep-17, 10:00 pm)
Tanglish : esaiyae
பார்வை : 105

மேலே