சேர்த்து வைத்த கனவு

சேர்த்து வைத்த கனவு..!
====================


பார்த்தமுதல் நாளிரவுமுதல் கனவில்வந்த நீதானெனக்கு
..........பத்தினியாய் ஆவாயென தினமும்நான் கனவுகண்டேன்.!
ஊர்கூடி தேரிழுக்கும் வழக்கம்போல் உன்னைநானும்..
..........உற்றாறுறவினரொடு ஊரறியமணப்பது போல் கனவுவரும்.!
கோர்க்கின்ற பூக்களெல்லாம் நாருடன் இணைவதுபோல்
..........கொண்டாடி மகிழத்தான் தினமும்நான் கனவுகண்டேன்.!
சேர்த்துவைத்த கனவெலாம் சிலநாளில் நனவாகுமெனச்..
..........சென்றயிரவுகள்.....உறங்காததாக ஓராயிர மானதம்மா.!


உருவத்தில் பெண்ணாய் உலகழகியாய்நீ வலம்வரவேணும்..
..........உனைப்படைத்திட்ட பிரம்மனே பெருமூச்சு விடவேணும்.!
பருவநிலா புருவமுடன் படைத்திவளைப் படைத்தவனும்..
..........பாவலன்நானும்..கண்ட கனவுக்காட்சி நனவாகவேணும்.!
ஒரு எண்ணிக்கையில் கண்டகனவுகள் கோடியானாலும்..
..........ஓரிரவுசேர்த்து வைத்தகனவுமொரு நொடியில் மறையும்..!
வருத்தமுடன் குமுறுகிறேன்.!..வருவாயாநீ நிஜத்துடன்..
..........வாஞ்சையொடு வேண்டுகிறேன் இறைவாநீ அருள்வாயா.!


எண்ணத்தில் தோன்றுவதில் ஆயிரம் வகையுண்டாமதில்..
..........ஏதொவொன்று ஆழமாய் ஊன்றிடினது கனவாகுமாம்.!
கண்மூடியென் மனதில் கண்ணிறைந்த காரிகையாயுனைக்..
..........காண ஆவல்மிகுவதால்...அடிக்கடியென் கனவில்வருவாய்.!
கிண்ணத்தில் நிரம்பியமதுவைப்போல்...கனவில் வந்தமாதுநீ..
..........கிட்டத்தில் வந்துவிடின் காதல்போதை உடன்தலைக்கேறும்.!
பெண்ணெனும் உருவிலுன்னழகை உருவகமாய் என்மனதில்.
..........பெரிதாய்ச்சேர்த்து வைத்தகனவு....கலையுமோர் விடியலில்.!

============================================================

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::11-09-17

நன்றி:: படம் கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (1-Oct-17, 8:07 pm)
பார்வை : 93

மேலே