ஆண் பிள்ளைக்கும் அழுகை வரும்

கல் நெஞ்சம் கொண்டவன்
இரும்பிதயம் உள்ளவன்
கொடியன், அரக்கன், வீரன், கம்பீரன்
ஆண்மகன்என்றதும் உதிக்கும்
இப்பிம்பத்தின் வட்டத்தில்
மனிதம் குறையா வாழும்
ஆண்வர்க்கத்திற்கு எம்மரியாதை

அப்பாவின் அடிகளை தாளாமல் கதறினான்
கலங்கியதோ தந்தவனின் (தந்தையின்) மனம்
அதுவே பெற்றவனுக்கும் அடி பெற்றவனுக்கும் உள்ள பந்தம்
அவ்வடிகளால் எத்தனை முறை அடி மாறாமலும்
அடிபடாமலும் அடிபணியாமலும் நடக்க உதவியது
என்பது வருடங்கள் மட்டுமே கூறும்

தன் தாயின் அன்பையும் அரவணைப்பும்
அவள் உயிரையும் விட்டுத்தரும் அத்தனையும் பெற்று
அவள் மனம் நோக பேசும் மகனைப் பார்த்துள்ளோம்
அந்த வார்த்தையை விட்டதன் வலியை
பகிர முடியாமல் அவன் மனதினுள் அழுததை
அரிய வாய்ப்பில்லை

தம்பியையும் தமக்கையையும் கேலி செய்து
சிரித்துக் கொண்டவன் அண்ணனென்றால்
அவர்கள் வெற்றி பெறுவதையும் வளர்ந்து வருவதையும்
கண்டு உச்சி முகர்ந்தவனும் அதே அண்ணன் தான்

எண்ணியதை படிக்கலாம் விரும்பிய வேலையை செய்யலாம்
பெண்ணின் வாய்ப்புகளை பறிக்கும் இவ்வுலகில்
ஆணுக்கில்லை ஓர் தடையும் - மறுப்பதற்கில்லை
ஆனால் எதிர்காலத்தையும் நடைமுறையையும் உணர்ந்து
தன் சமூகம் வரைந்த வட்டத்தில்
தன் எண்ணத்தையும் விருப்பத்தையும்
குறுகிக் கொண்ட ஆண்களும் வீட்டிற்கொருவர் உண்டு

தன் சிசுவை ஈன்றெடுக்க அவன் மனைவி
படும் வலி வேதனையை கேட்டும்
அந்த சிசுவை முதன்முறை கையில் ஏந்தி
பார்த்தும் கண்கலங்காத ஆண்மகன் இருந்ததில்லை

மனமும் உடலும் திடமாய் இருக்கும் எவனுக்கும்
ஒரு தங்கையோ பெண்பிள்ளையோ இருந்தால்
அவன் மெல்லிய தன்மையை உணர முடியும்
அவள் திருமண வேலைகளில் இங்கும் அங்கும்
ஓடி கொண்டிருந்த போதிலும்
ஒரு ஐந்து நிமிடம் காணாமல் சென்றிருப்பான்
அவன் கண்ணீரை மறைத்து வைக்க

சமூகம் தரும் அழுத்தங்கள் தாளாமல்
ஒரு நாளாவது அவன் தாரத்தின் தோளில்
சாய்ந்திருப்பான் அவள் புரிந்து கொள்பவளாயின்
இல்லையோ அவன் தலையணையை கேட்டுப்பார்

தன் தாய் தந்தை மறைந்த பொழுது
அவன் மடியில் ஏந்தி அழுதிட ஏங்கும்
இருந்தும் சடங்குகள் நடத்தும் ஏற்பாடுகளை
பார்த்து கொண்டே கண்ணீரை விழுங்கி கொள்வான்

இப்படியே தொண்டை கவ்வும் தருணங்கள்
தாண்டி தன் உணர்வுகளை ரகசியமாய் வைத்து பழகி
வயது முதிர்ந்த தருவாயில் அண்ணார்ந்து பார்த்த படி
நம் வீட்டில் ஒரு கிழவன் வீற்றிருப்பதில் வியப்பில்லை

அவன் சொற்கள் தேடும் செவி
எந்த உலகிலாவது கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் அவனுடனே இயற்கை எய்தும்

பிறந்த உடன் கற்றுக்கொண்ட
முதல் வித்தையாகிய அழுகையை
பேச தொடங்கிய உடனே பரிபோகின்றது
ஆனால் யாருக்கு தெரியும் கண்ணீர் சிந்தாமல்
அழும் வித்தையில் தேர்ச்சி பெற்றவன்
ஆண்மகன் என்று

எழுதியவர் : (3-Oct-17, 1:42 am)
பார்வை : 372

மேலே