மகன் பிறந்த நாள்
பூச்சிகளிடத்தில் பிரியமானவனே!
உனக்குப் பூச்சிகளிடம் பிரியமா?
பூச்சிகளுக்கு உன்னிடம் பிரியமா?
இந்த ஆராய்ச்சி எனக்கு!
உனக்கோ...
பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சி விருப்பம்!
இவ்வெண்ணம் ஆழமாய் வேர்விட
அப்பூச்சிகளிடம் நீ
கடிவாங்கியதும் காரணமோ?
நடை பயிலும் வயதில்
நெருப்பெறும்புப் புற்றுகள் யாவும்
உனக்கு சஞ்சீவி மலைகள்!
பெயர்க்க முயற்சித்து
பெருமளவில் கடிபடுவாய்!
எத்தனைப் பேர் குழுமியிருந்தாலும்
கொசுப்படையின் வாக்கெடுப்பில் முந்தி நின்று
உன் இரத்தத்தை அவற்றுக்குப்
பந்தி வைப்பாய்!
நாலு வயதில் கோல்கொண்டு
குளவிக்கூடு கலைத்து,
கோபக்குளவிகளின்
ஏராளக்கொட்டுகளைத்
தலையில் வாங்கினாய்!
எப்படியடா கண்ணா,
அந்நச்சு வலியைத் தாங்கினாய்?
அறியாவயதில்
ஓர் அறுவை சிகிச்சை!
அழுகையில்லை;
ஆர்ப்பாட்டமில்லை!
அய்யோவென்று அலறவில்லை;
அம்மாவென்று முனகவில்லை!
வலியோ, உடல்வேதனையோ
வெளிவராமற்செய்து
வண்டுதுளைத்தும் வாய்திறவாக்
கர்ணனை நினைவுறுத்துகிறாய்!
பிடிவாதக் குழந்தைகளை
எங்கேணும் காணநேரிட்டால்
பெருமிதம் கொள்கிறேன், தம்பீ,
உன் பொறுமையை எண்ணி!
அளவுகடந்த அன்பினாலே
அவ்வப்போது என்னருகில் நின்று
கன்னம் உரசிப் பெற்றுச்செல்லும்
அளவிலா முத்தங்களை
அநியாய வட்டியுடன்
அதிவிரைவில் திருப்பித்தருவாய்!
நேற்றுதான் உன்னைத் தொட்டிலில் இட்டுத்
தாலாட்டுப் பாடியதுபோலொரு நினைவு!
நீயோ......
என் தோள்வரை வளர்ந்துநின்று
கால்பந்து விளையாடினேன் அம்மா,
காலில் அடிபட்டுவிட்டது என்கிறாய்!
துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,
பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!