ஏன் இந்த நிலைமை
யாருடைய அணுக்களில்
ஜனித்தோம்?
எத்தகைய இலக்குக்காகப்
பிறந்தோம்?
யாரெங்களின் அரசாங்கம்?
எந்தச் சட்டத்திற்குக்
கீழாக எங்களின்
வாழ்க்கை?
தூக்கியெறியப்படும்
எச்சிலிலைகளிலும்
தெருமுனைக் குப்பைக்கழிவுகளிலும்
உணவைத் தேடுகின்றோம்
மூத்திரச்சந்தடியில்
தங்கி தினம் வாடுகின்றோம்
உழைத்துண்டு வாழ்ந்தால் போதுமென
எங்கேனும் வேலைகேட்டுப்
போனாலும் தரங்கெட்டப் பிறவியென விரட்டியடிக்கிறான்
இவனுக்கென்ன தகுதியெனத் தாழ்த்தி நகைக்கிறான்
வானுயர்ந்த
கட்டிடங்கள்
அதை அலங்கரிங்கும்
கண்ணாடிச்சுவர்கள்
நகரெங்கும் கான்கிரீட் விரிக்கைகள்
அதில் நடைபெறும்
கோடிகள்புரளும்
வியாபாரங்கள்
அங்கு எத்தனை எத்தனை மனிதர்கள்
இதில் யார் நாங்கள் ?
யாரோ இருவரின் சிற்றின்ப இச்சைத்தணிப்பின்
விளைவாய்
வீணாகப் பெற்றெடுக்கப்பட்டுக் குப்பையாகக்
குப்பைத்தொட்டிகளில்
வீசியெறியப்பட்டு,
இவன்(ள்) அனாதைக் குழந்தையெனப் பிச்சையெடுப்பதற்கும்
எங்களின் மழலைப்பருவத்தை வைத்து எவனோ பிழைப்பு நடத்துவதற்கும்
பாத்திரமாகிப்
போனோமேயன்றி
யாரும் எங்களைப் பத்திரப் படுத்தவில்லையே...
உலகத்தின் பார்வையில் நாங்கள்
ஈனப்பிறவிகள்
இழிஜென்மங்கள்..
நாங்கள் கேட்டோமா இந்தப் பிறவியை?
யாரிடம் முறையிடுவோம்?
யாரிம் எங்கள் வலிகளைப் பகிர்ந்துகொள்வோம்?
யாருக்குத்தெரியும்
எங்கள் இதயத்தின்
வேதனைகள்?
எங்கள் கண்ணீரைத் துடைக்க யார் கரம் கொடுப்பது?
யாருமேயில்லை? இங்கு நீதியுமில்லை
நியாமுமில்லை....
சுயநலங்கொண்ட சமூகத்தில்
சுயநினைவின்றிச்
சுற்றித் திரிகிறோம்
சுதந்தரமாய் அல்ல
சுயநலமின்றி....