நதிநீர் இணைப்பு
நதிநீர் இணைப்பு
நாடெங்கிலும் முழக்கம்!
"ஜீவ நதிகளை இணைப்போம்
ஜீவ ராசிகளை வாழ வைப்போம் "என்று
'ஜீவ காருண்யம் ' பேசும் அரசியல் வாதிகள்.
இவர்கள் திருந்தி விட்டார்களோ?
நம்மையே சற்று கிள்ளிப் பார்த்துக் கொள்கிறோம்.
நதிநீர் இணைப்பை ஏதோ
நாற்கர சாலை அமைப்பதைப் போன்ற மாயையை நாசூக்காக விதைக்கிறார்கள்.
(மறைவில் தயாராகி விட்டார்கள்
நாட்டு சொத்தை
நதிநீர் இணைப்பு என்ற பெயரில்
தரகர்களுக்கு தாரைவார்த்திட.)
பொதுநலவாதிகள் இன்னொரு புறம்
நதிநீர் கடலில் வீணாக கலக்கிறது எனவும்
நயம்பட அதை முழுவதும் பயன்படுத்துவோம் எனவும்
வெள்ளந்திகளாய் வீரவசனம் பேசுகின்றனர்.
நதி ஓர் ஜீவ மண்டலம்.
தாதுக்கள், நிலை உயிர்கள் மற்றும் நகரும் உயிர்கள் இப்படியான வாழ்க்கை தொகுப்பை ஒன்று சேரப்படைத்து பராமரிப்பதை
நடந்த வண்ணம் செய்து காட்டும்
ஜீவ நங்கை.
நதி ஓர் ஆக்ஸிஜன் ஆக்கி.
செல்லும் வழிகளில் மட்டுமல்ல
சேரும் கடலிலும்.
அங்கு ஜனிக்கும் பல்லுயிரிலும்.
இழுத்த வாக்கெல்லாம் பின்னே ஓடிவரும்
செல்லப்பிராணி அல்ல.
காலங்காலமாக தன்வழியை
தானே தீர்மானித்துக் கொண்டு
ஆரப்பரிப்பாய் கொட்டும் இடங்களிலும்
அமைதியாய் கடக்கும் ஊர்களிலும்
பேரமைதியாய் கடல்சங்கமத்திலும்
தன்னை கரைத்து வாழ்வை நிறைத்து தரும் ஜீவ மாதா.
இது எல்லோர்க்கும் தெரியுமே! புதிதென்ன?
வறண்ட மாநிலங்களை, தரிசாய் வகிடெடுத்த நிலங்களை எப்படி பேணுவோம்? வழியுண்டா என
விளம்பும் தோழர்களே!
வான்மழை அறுவடை பழகிக் கொள்வோம்.
நம் வீட்டு ஊரணிகளில் மட்டுமல்ல;
ஊர்சுற்றிய நீர்ப்பரப்புகள் அனைத்திலும்.
குளம்,குட்டை, கண்மாய்,ஏரி போன்ற யாவற்றிலும்.
நீர் நிலைகளை பாதுகாக்கும்
நீர் மேலாண்மை படை உருவாகட்டும்.
விரட்டியடிப்போம்.
ஏற்கனவே நீர்நிலைகளின் அருகாமையில் வாழும் குடிசை வாசிகளை அல்ல,
ஆக்கரமிப்பு ஆக்டோபஸ்களான கார்ப்பரேட்டுகள் நடத்தும்
நட்சத்திர ரிசார்ட்டுகளை.
வேதியியல் கழிவுகளை வெட்கமில்லாமல்
வெளியேற்றும், இலாபவாதம் மட்டும் பேசும் பன்னாட்டு பண்ணாடைகளை.
வாருங்கள் தோழரே!
இருகரம் கொண்டும்
வேண்டுமாயின் நம் சிரம் தந்தும் காப்போம்
நதிகள் செல்லும் பாதைகளை!
நீர்நிலைகள் உறங்கும் பகுதிகளை!
நதி ஓர் உயிர் மண்டலம்
நம் வாழ்வின் சுழல் மண்டலம்.
- ஜான் பிரான்சிஸ்.