ஆண் பெண் ஈர்ப்பு எங்க வாழ்க்கையைலே ஒரு கானல் நீர்
எங்க அப்பா ஒரு தச்சராக வேலை செஞ்சு வந்தார்.அவருக்கு என் அக்கா தேவி பிறந்தாள் . ஆனால்
பாவம் அவள் மிக கருப்பாகவும் வாய்க்கு மேலே உதடு சற்று கிழிந்து இருந்தும் பிறந்தாளாம். என்
அப்பாவும் அம்மாவும் மிகவும் வருத்தப் பட்டார்களாம்தேவி பொறந்து ஆறு மாசம் ஆனதும் தேவிக்கு
ஆபரேஷன் .பண்ணி உதடு விரிசலை சரி செய்ய பணம் வேண்டி இருக்குமே என்று ஒரு சித்தாள்
வேலை போய் கிட்டு இருந்தார்களாம்.தேவி பொறந்து ரெண்டு வருஷம் கழிச்சு நான்
பொறந்தேன்.எனக்கு ராணி என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.நான் போன
ஜென்மத்தில் செஞ்ச புண்ணியமோ என்னவோ நான் ஒரு பாப்பார பொண்ணு மாதிரி நல்ல கலராகவும்
அழகாகவும் பொறந்தேன்.நானும் தேவியும் உயிருக்கு உயிரா பழகி வந்தோம்.
எங்க அம்மாவும் அப்பாவும் கொஞ்ச பணம் சேர்ந்தவுடன் தேவிக்கு உதடு ஆபரேஷன்
பண்ணினாங்க. அவஉதடு கொஞ்சம் சேர்ந்தது மாதிரி இருந்தாலும் அவள் உதட்டின் மேலே அசிங்கமாக
நிறைய சதை இருந்திச்சு எங்க அம்மா அப்பாவுக்கும் ரொம்ப களையாய் இருந்திச்சு.அவங்க தேவிக்கு
ஆபரேஷன் பண்ணியும் அவ உதடு மத்த பொண்ணு குழந்தைகளுக்கு இருக்கிற மாதிரி சரியாவலையே
என்று மிகவும் வருத்தப் பட்டார்கள்.
தேவி பத்தாவது படிச்சு முடிச்சவுடனே அவளுக்கு கல்யாணம் பண்ண நினைச்சு இடம் பாத்தாங்க.
தேவியை பாத்த எந்த பையனும் தேவியை கல்யாணம் பண்ணிக்க முன் வரலே.ரெண்டு வருஷம்
அவங்களும் விடாம தேவிக்கு இடம் பாத்தாங்க.இப்போ தேவியை பொண்ணு பாக்க வந்த பையங்க
எல்லாம் " எங்களுக்கு உங்க முதல் பொண்ணு வேணாம்.கட்டி குடுத்தா உங்க ரெண்டாவது பொண்ணு
ராணியை கட்டி குடுங்க. நாங்க அவளை எங்க பையனுக்கு கல்யாணம் கட்டிக்கிறோம்" ன்னு கேக்க
ஆரம்பிச்சாங்க . என் அம்மாவும் அப்பாவும் " எங்களுக்கு மொத பொண்ணு இருக்கும் போது எப்படிங்க
நாங்க எங்க ரெண்டாவது பொண்ணை கல்யாணம் கட்டி குடுக்கிறது" என்று சொல்லி வந்தவர்களை
அனுப்பி விட்டார்.
இந்த ஏக்கத்திலே என் அம்மாவும் அப்பாவும் ஒருவர் பின் ஒருவராக காலமாகி விட்டார்கள்.
எங்க அம்மா அப்பா இறந்த பிறகு நானும் தேவியும் ஒரு சித்தாளா வேலை செஞ்சு வந்து கிட்டு
இருந்தோம்.
என் அக்காவுக்கு கல்யாணம் ஆவாததனாலே எனக்கு மனசு ரொம்ப வேதனைப் பட்டது.நான் பாக்க
ரொம்ப நல்லா இருக்கேன்னு என்னை கல்யாணம் கட்டிக்க வந்த பையங்க எல்லாம் ஆசைப் படறாங்க.
நான் கல்யாணம் கட்டி கிட்டு போயிட்டா என் அக்காவுக்கு யார் துணையா இருப்பாங்கன்னு. அவ இந்த
உலகத்திலே தனியா ஒரூ கண்ணிப் பொண்ணா எப்படி வாழ்ந்து வருவான்னு நினைச்சு நானும்
கல்யாணம் கட்டிக்காம அவளுக்கு துணையா வாழ்ந்து வந்தேன்.
தேவிக்கு ஐம்பது வயசு ஆவும் போது அவ விஷ ஜூரம் வந்து இறந்து போயிட்டா.
நான் அவ உடம்பை புதைச்சு வந்து விட்டு இப்போ தனி மரமா வாழ்ந்து கிட்டு வரேன்.
தேவியை கல்யாணம் பண்ணிக்க கொள்ள ஒரு மஹாதேவனோ, சஹாதேவனோ முன் வரவில்லை.
அதே போல இந்த ராணியை கல்யாணம் பண்ணிக்க கொள்ள ஒரு சின்ன ராஜாவோ பெரிய ராஜாவோ
இன்னும் வரவில்லை.
தேவி வாழ்க்கையிலும் என் வாழ்க்கையிலும் இந்த " ஆண் பெண் ஈர்ப்பு" ஒரு கானல் நீர் போல
தாங்க ஆயிடுச்சி.
இல்லையாங்க???