கோதையவள் வாழி

ஆடிமாத பூரத்தில் அவதரித்த பெண்ணாள்
அரங்கனிடம் அன்புவைத்த அழகுமிகு கண்ணாள் !
பாடிநிதம் மாலுக்குத் தொண்டுசெயும் தந்தை
பக்தியையும் உணவுடனே ஊட்டிவிட்ட தாலே
ஈடில்லாப் பேரன்பால் பூமாலை கட்டி
இணைதனக்குக் கண்ணனென இதயத்தில் கொண்டாள் !
சூடியதை முதலில்தான் அழகுபார்த்தப் பின்னே
தூயவனாம் இறைவனுக்கே அர்ப்பணித்தாள் நன்றே !

மார்கழியில் நோன்பிருந்து திருப்பாவை பாடி
மாதவனை நெஞ்சுக்குள் நிதம்பக்தி செய்தாள் !
கார்மேக வண்ணனுடன் தூயகாதல் கொண்டு
கசிந்துருகிக் கைப்பிடிக்கப் பெருங்கனவு கண்டாள் !
சீர்மிகுந்த திருவரங்க நாதனவன் கூற்றால்
சிவிகையிலே சுடர்க்கொடியாள் அங்குவந்து சேர்ந்தாள் !
ஊர்பார்க்க அரங்கனையே கண்ணாரக் கண்டு
ஒன்றிவிட்டாள் அவனோடு கோதையவள் வாழி !

கொள்ளைகொண்டாள் நம்மனத்தை ஆழ்வாராய் ஆண்டாள்
கோதையவள் பாவையினைப் பாடிடுவோம் நாமும் !
கள்ளமில்லா இதயத்தில் குடியிருக்கும் தெய்வம்
கண்ணீரால் பணிவோர்க்கு நல்லவழி காட்டும் !
உள்ளத்தே அன்பிருந்தால் துணையிருக்கும் நாளும்
உண்மையான பக்தியினால் ஆட்கொள்ளும் நம்மை !
வெள்ளமெனப் பாய்ந்துவரும் திருவருளும் கூடி
வீடுபேறும் கிட்டிடுமே தெளிந்திடுவாய் நெஞ்சே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Oct-17, 12:10 am)
பார்வை : 89

மேலே