இறைவா யார் நீ

இரை தேடும் உயிர்களில்
இறையே உனைதேடும் உயிர்நானே!

கரை புரண்டோடும் வெள்ளமாய்
தரை மீதினில் ஓடினேன் - உனைதேடியே

ஊர் பல
உருவம் பல
உலகம் பல - உனை பற்றி
கூறும் வகையினில் குழம்பினேன்.

மண் பொன் சிலைகளிலுண்டோ?
விண் மண் பூதங்களிலுண்டோ? - நீ

மனங்கள் எத்தனையோ?
மதங்கள் அத்தனையே!

ஒவ்வொன்றும் ஓர் விதத்தில்
உனை கூற முயன்றனவே!

எங்குமாகி நின்றோய் நீ
யாதொன்றும் அறியேன் நான்

மலை மேல் ஏறி தேடினேன்
பாத யாத்திரை ஊராக ஓடினேன்
கண் இருந்தும் காணாது வாடினேன்
உண்மை உணரா மக்களில் கூடினேன்

எட்டும் இரண்டும் அறியேன்
நின்பதம் கனவிலும் நினையேன்
வாசிதனில் ஏறும்வகை அறியேன்
மனமடங்கும் உபாயமதை புரியேன்!

கடிமலர் தொடுத்து பாதத்தில் சூடினேன்
இசைபண் அமைத்து நாதத்தில் பாடினேன்
மனமொன்றி மந்திரம் நாளும் ஜெபித்தேன்
கண்மூன்றில் புதைந்து உலகினை விடுத்தேன்

யான் உனை காண வழியேதுமுண்டோ?
ஏழைக்கு இரங்க உனக்குதான் மனமுண்டோ?

எங்கு தேடினும் காணவில்லை - நீ
யாதொன்று செய்தும் தோன்றவில்லை - நீ
கண்ணீர் மல்கினேன் இரங்கவில்லை - நீ
என்னை படைத்த இறைவாயார் - நீ

இறைவா யார் நீ.

எழுதியவர் : ஜித்து (9-Oct-17, 7:19 pm)
Tanglish : iraivaa yaar nee
பார்வை : 441

மேலே