சிவ சொரூபம்
சிவனுக்கு எக்கோயில்களிலும் உருவமில்லை
காரணம் சாபம் என்பதில் ஞாயமில்லை
உடலுக்கு உருவமுண்டு உயிருக்கு ஏதடா??
அண்டத்தில் எத்தனை உயிர்கள் - உண்டோ
அத்தனையும் சிவ சொரூபமே
சிறிதோ, பெரிதோ,
ஒரு நாளோ, பல நூறு வருடமோ
என எல்லாம் சிவ சொரூபமே.
கோயில்களில் சிவனை சுயம்பு லிங்கமாக காண்பிப்பதற்கு அர்த்தம் உண்டு.
அந்த சிவன் (ஜீவன்) தானாகவே
தோன்றியதால் தான் சுயம்பு ஆகிறான்.
தானாக தோன்றியது எதுவோ,
அது தானாகவே தான் அழியும்.
தோன்றியவனும்(பிறப்பு) அவனே
அழித்தவனும்(இறப்பு) அவனே!
ஈன்றெடுத்த தாயாகினும் உயிரை
பெற்றாளே அன்றி படைக்கவில்லை.
வளர்த்தெடுத்த தந்தையாகினும் உயிரை
வளர்த்தாரே அன்றி வார்க்கவில்லை.
தானகேவே தான் தோன்றியதை
குறிக்கும் அடையாளமே சிவலிங்கம்.
சிவலிங்கம் என்றால்.
ஆண், பெண் குறி சேர்ப்பு என்றோ
மூளையின் ஒரு பகுதியின் சுரப்பி என்றோ
எண்ணுபவர்கள் கோடி இவ்வுலகில்.
தன் உயிரை தானே தரிசித்த
ஒரு ஆன்மீக விஞ்ஞானி
உருவாக்கிய குறியீடு தான் அது.
ஊருக்கு செல்ல பயன்படும் வரைபடம் தான் அது.
வரைபடம் ஒரு நாளும் ஊர் ஆகாது.
அங்கு உறைந்திருக்கும் ஈசன் ஆகாது
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்
நித்தம் நித்தம் உன்னில் இருந்து பேசுகிறதே
அதை விட்டு விட்டு ஒரு கல் என்றாவது
ஒரு நாள் பேசும், உதவும், காக்கும்
என்று எண்ணுவது பேதைமை
உரைப்பேன் சிவ சொரூபம் காணும் ரகசியமதை –
பார்வை எங்கு செல்லுமோ
மனம் அங்கு செல்லும்
மனம் எங்கு செல்லுமோ
காற்று அங்கு செல்லும்
இம்மூன்றும் ஓரிடத்தில் - அடங்கிய நிலையை
குறிக்கும் குறியீடே நந்தி என காண்
(இந்த அடக்கமே அமரருள் உய்க்கும்)
பார்வை, மனம், காற்று மூன்றும்
ஒடுங்கும் இடமே சிவ சந்நிதி ஆகும்
ஐம்புலன்கள் அடக்கும் உபாயம் இதுவே.
மேற்சொன்ன அவன் சந்நிதியில் நின்று பழக பழக
விடையேறி உமையொரு பாகன் காட்சி தருவானே!!!